இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு சீனா திரைமறைவில் காய்நகர்த்தி வருகின்றது என தேசிய புலனாய்வுத்துறை அரச உயர்மட்டத்திடம் தகவல் தெரிவித்திருப்பதாக மிக நம்பகரமாக அறிய முடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டுச் சேவையை சாராத சீனக் கம்யூனிஸ்ட் கட்சியி ன் முக்கியஸ்தரான ஒருவரான செங் சுயானை புதிய தூதுவராக நியமித்திருக்கும் சீனா, இலங்கையில் தற்போதுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையைப் பயன்படுத்தி, அவரினூடாக சில முக்கிய காய்நகர்த்தல்களை செய்யத் திட்டமிட்டிருக்கின்றது என அரச தேசிய புலனாய்வுத்துறை தனது இரகசிய அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ளது என்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் கொழும்பு வந்து பதவியேற்ற புதிய சீனத் தூதுவர் செங் சுயான், பதவியேற்ற கையோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் கொழும்பு அரசியலில் மாற்றமொன்றை செய்ய திட்டமிடும் சீனா அதற்குத் தேவையான பின்புல ஏற்பாடுகளையும் அரசியல் கட்சிகளுக்கு செய்யும் வாய்ப்பிருக்கின்றது என தேசிய புலனாய்வுத்துறை அரசை எச்சரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த மிகமுக்கிய அபிவிருத்தித்திட்டங்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிரடியாக தடுத்துநிறுத்தப்பட்டது. இதனால், கொழும்பு மீது, பீஜிங் கடும் சீற்றத்துடன் இருந்தது.
இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. அத்துடன், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை தனக்கு வழங்கிவிட்டு, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கியதாலும் சீனா கடும் அதிருப்தியில் இருந்தது. எனினும், அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் மஹிந்தவின் கை ஓங்கியுள்ளது. இவரின் ஆட்சிக்காலத்தில் சீனாவுக்கு சார்பான வெளிவிவகாரக்கொள்கையையே இலங்கை அரசு கடைப்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அதிரடி காட்ட சீனா தயாராகி வருவதாக அறியமுடிகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.