தற்போது நிறைய பேர் தலைமுடி உதிர்வால் கஷ்டப்படுகின்றனர். தலைமுடி உதிர்வதை நினைத்து தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர். ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு மருத்துவ காரணங்கள் மற்றும் மரபணுக்கள் கூட காரணங்களாக இருக்கும்.
தலைமுடி உதிர்ந்தால், அதற்கான நிவாரணி என்னவென்று பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு பின்பற்றுவோம். அவற்றில் பெரும்பாலான வழிகள் தோல்வியைத் தான் தரும். அப்படியெனில் வேறு என்ன வழிகள் உள்ளது என்று நீங்கள் கேட்பது புரிகிறது
என்ன தான் தலைமுடி உதிர்ந்தாலும், முதலில் சிகிச்சையை எடுக்கும் முன், அதற்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள்: தலைமுடி உதிர்வதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், வைட்டமின் குறைபாடுகள், மன அழுத்தம், தூக்கமின்மை, தைராய்டு பிரச்சனைகள், புகைப்பிடித்தல், மரபணுக்கள் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற பல காரணங்கள் உள்ளன. மேலும் தலைமுடிக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அந்த பொருட்களைப் பயன்படுத்தும் விதமும் தலைமுடியை உதிரச் செய்யும்.
இவற்றில் மாதவிடாய் நிறுத்தம் மற்றும் மரபணுக்களால் ஏற்படும் முடி உதிர்விற்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. ஆனால் உதிரும் முடியின் அளவைக் குறைக்கலாம். வேறு பல காரணங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முயற்சிக்கலாம்.
தியானம்: தினமும் 10 நிமிடம் மனதை அமைதிப்படுத்தும் தியானத்தில் ஈடுபட்ல், மன அழுத்தம் குறைந்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். அதிலும் கண்களை மூடிக் கொண்டு மனதை நெற்றிப்பொட்டில் ஒருமுகப்படுத்தி, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இப்படி 10 நிமிடம் தொடர்ந்து செய்து வந்தால், மன அழுத்தத்தால் முடி உதிர்வதைத் தடுக்கப்படும்.
உண்ணும் உணவுகள்: தினமும் போதிய அளவில் தூக்கத்தை மேற்கொண்டு, மன அழுத்தமின்றி இருந்து தலைமுடி உதிர்ந்தால், நீங்கள் சாப்பிடும் உணவுப் பழக்கத்தில் தவறுள்ளது என்று அர்த்தம். எனவே தினமும் போதிய அளவில் இரும்புச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ், பால், முட்டை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மசாஜ்: தலை மசாஜ் செய்வதும் முடியின் வளர்ச்சித் தூண்டும். எனவே வாரத்திற்கு 2 முறை தலைக்கு 10 நிமிடம் எண்ணெய் மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து குளியுங்கள். அதுவும் இந்த மசாஜிற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
வெங்காய சாறு: வெங்காய சாற்றினை தினமும் தலையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், ஓர் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.