பொதுமக்களும் சாதாரண கட்டணத்தில் 5 நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு ஏற்ற வகையிலேயே, காங்கேசன் துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகை மாற்றியமைக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காங்கேசன்துறையில், கீரிமலைக்கு அண்மையாக 3.5 பில்லியன் ரூபா செலவின் ஆடம்பர மாளிகையை அமைத்தார். அதனைத் தான் பாவிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
100 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த 5 நட்சத்திர விடுதிக்கு ஒப்பான மாளிகையை, பாதுகாப்புத் தரப்பினர் நிர்மாணித்தனர். இதனைச் சுற்றுலாத்துறைக்கு ஒப்படைக்கப் போவதாக அரச தலைவர் மைத்திரிபால தேர்தல் பரப்புரைக் காலத்தில் அறிவித்திருந்தார்.
அரச சுற்றுலா விடுதியாகவும், அமைச்சுக்களுக்கான சுற்றுலா விடுதியாகவும், பொதுமக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தக் கூடியதாகவும் இந்த 5 நட்சத்திர விடுதி பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான முற்பதிவுகள், ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.