இலங்கையில் தலை தூக்கியுள்ள பிரச்சனை!

இலங்கை முழுவதும் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம் கொத்து ரொட்டியில் ஆண்மை இழக்கச் செய்யும் மருந்து கலக்கப்பட்டுள்ளதா, இல்லையா? என்பதாகும்.கொத்து ரொட்டியில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலக்கப்பட்டிருப்பதாகக் கூறி ஒரு குழுவினரால் அண்மையில் முஸ்லிம் ஹோட்டல் ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து இந்த விவாதம் சூடு பிடித்துள்ளது.முஸ்லிம் உணவு விடுதிகளில் இப்படியான உணவுகள் பரிமாறப்படுவதாக பரப்பப்படும் ஒரு செய்தியின் தொடர்ச்சியே இந்தத் தாக்குதலாகும்.

ஆனால் இதற்கு முன்னதாகவும் சில சம்பவங்கள் இவ்வாறு நடந்துள்ளன.அதாவது முஸ்லிம்கள் இங்குள்ள ஏனைய இனத்தைச் சேர்ந்த ஆண்களை (சிங்களவர் மற்றும் தமிழர்களை) ஆண்மையிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்பதே பரப்பப்பட்ட வதந்திச் செய்தியாகும்.இதற்கு முஸ்லிம்களால் நடத்தப்படும் உணவகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அந்த வதந்திச் செய்திகள் கூறுகின்றன.இலங்கையைப் பொறுத்தவரை இங்குள்ள சிறுகடைகளை நடத்துவதில் முஸ்லிம்கள் பிரபலமாக இருப்பதாகக் கூறும் சிறிலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரான என்.எம்.அமீன், அவற்றை இலக்கு வைத்தே இத்தகைய பிரசாரங்களை கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் செய்வதாக குற்றம் சாட்டுகிறார்.

வணிகப் போட்டியே இதற்கான அடிப்படைக் காரணமாக இருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், சிறுகடைகளை மாத்திரமே முஸ்லிம்கள் பெருமளவில் வைத்திருப்பதாகவும், இலங்கையில் பெரு வணிக நிறுவனங்கள் மிகச் சிலவே முஸ்லிம்களிடம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.கடந்த அரசாங்க காலத்தில் மாத்திரமல்லாமல், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட இப்படியான குற்றச்சாட்டுகளை வைத்து முஸ்லிம்களின் கடைகள் தாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் அம்பாறை மாவட்டத்தின் செய்தியாளர் ஒருவர்.

மலட்டுத்தன்மை மருந்து மாத்திரமல்லாமல், முஸ்லிம்களின் புடவைக்கடைகளில் சிங்களப் பெண்கள் ஆடை மாற்றுவதை படம் பிடித்ததாகக் கூறிக் கூட விஷமப் பிரசாரங்கள் நடந்ததாக அவர் கூறுகிறார்.இந்தப் பிரசாரங்களை செய்பவர்களுக்கும் தாக்குதலை நடத்தியவர்களுக்கும் இவை எல்லாம் பொய் என்பது தெரியும்’ என்று கூறுகின்ற அவர், முஸ்லிம்கள் மீதான தொழில் ரீதியான பொறாமையே இந்த தாக்குதலுக்குக் காரணம் என்கிறார்.குறிப்பாக, அம்பாறை தாக்குதலின் போது உணவில் மருந்து இருப்பதாகக் கூறி வாக்குவாதம் செய்த சில நிமிடங்களிலேயே அங்கு பேருந்து வண்டிகளில் ஆட்கள் வந்து இறங்கி தாக்கியதாக அவர் தெரிவித்தார். ஆகவே இது திட்டமிட்ட தாக்குதல் என்பது அவரது வாதம்.

மலட்டுத்தன்மை மருந்து குறித்து முஸ்லிம்களை குற்றஞ்சாட்டும் பதிவுகள் இங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் பகுதிகளில் இருந்து பெருவாரியாக சமூக ஊடகங்களில் பதியப்படுகின்றன.குறிப்பாக சிங்களவர்கள் மாத்திரம் அல்லாமல், இலங்கை தமிழர்களும் இப்படியான பதிவுகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் பல தமிழர்களும் முகநூலில் இப்படியான பதிவுகளைச் செய்கிறார்கள்.

பொதுவாக சிங்களவர்களும், தமிழர்களும் தமக்கிடையே சமூக ஊடகங்களில் ஊடாடுவது மிகக் குறைவு. ஆனால், இந்த விடயத்தில் தமிழில் வரும் பதிவுகளை கூகுள் மொழிபெயர்ப்பான் மூலம் மொழிபெயர்த்து பல சிங்களவர்கள் தமக்கிடையே பகிர்கிறார்கள்.கிழக்கு மாகாணத்தில் தம்முடைய காணிகளை முஸ்லிம்கள் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்பதாகக் கருதும் தமிழர்கள் சிலரும் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் என்று நம்புகிறார்கள்.

இதனால், கிழக்கில் ஒரு இன ரீதியான பதற்ற உணர்வு காணப்படுகின்றது.இதேவேளை, கொத்து ரொட்டியில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து கலக்கப்படுவதாக கூறப்படுவதை வைத்து இலங்கையர்கள் மத்தியில் நையாண்டியான பதிவுகளும் செய்யப்படுகின்றன.முஸ்லிம்களுக்கு எதிரான இது பற்றிய குற்றச்சாட்டுகளை நம்பாதவர்கள் கூட இப்படியான பதிவுகளை நையாண்டியாகச் செய்கிறார்கள்.ஆனால், இந்த விடயங்களில் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் தேசிய முன்னணியின் செல்வராசா கஜேந்திரன் போன்றோர் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தாக்குதலை கண்டிப்பதாக கூறினார்கள். அரசாங்கம் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.அமைச்சர் மனோ கணேசன் இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் கடுமையாக இடித்துரைத்துள்ளார். இதற்கு முன்னதாகவும் இப்படியான சம்பவங்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து இருக்கிறதா என்ற விவாதமும் இங்கு பலமடைந்துள்ளது.

முஸ்லிம்கள் சார்பில் பேசிய மலாய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.எல்.எம். நஜிமுதீன், ஆண்மையை குலைக்கும் மருந்து ஆங்கில மருத்துவத்தில் இருப்பதாக எவராவது நிருபித்தால், தான் பத்து இலட்சம் ரூபா நன்கொடையாகக் கொடுப்பேன் என்று சவால் விட்டிருக்கிறார்.அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனரத்ன, அப்படியாக மருந்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.இவர் ஒரு மருத்துவர்.அதனையடுத்த ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்துக்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க, ஆண்மையை இழக்கச் செய்யும் ஆங்கில மருந்து(அலோபதி) கிடையாது என்று கூறியுள்ளார்.குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பிரசாரத்தை நிறுத்துவதுதான் இவற்றுக்கான நோக்கம். ஆனால், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பிரசாரங்களும், தாக்குதல்களும் அடிக்கடி நடக்கின்றன, தொடர்கின்றன.

அவற்றை முற்றாக நிறுத்த ஒரு பலமான நடவடிக்கை இங்கு தேவைப்படுகின்றது என்பதுதான் இங்கு நல்லிணக்கம் கோருவோரின் கருத்தாக இருக்கிறது.