அளவுக்கு அதிகமானால் அமிர்தம் கூட நஞ்சாகும் என்ற ஓர் பழமொழியும் உள்ளது. இதற்கு ஏற்ப தண்ணீரை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கேடு விளையும்.
ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் அவசியமானது. அதேப் போல் ஒவ்வொருவரின் உடல் வாகுக்கு ஏற்ப நீரின் அளவும் வேறுபடும்.
சில வகையான உடலுக்கு ஒரு நாளைக்கு குறைவான அளவு தண்ணீரே போதுமானது. ஒருவர் அளவுக்கு அதிகமாக நீரைப் பருகும் போது, உடலினுள் உள்ள உறுப்புக்கள் அதிக சுமைக்கு உள்ளாகி, அதிக அழுத்தத்திற்கு உட்படும்.
எனவே ஒவ்வொருவரும் எவ்வளவு தண்ணீரைப் பருக வேண்டும் என்பதை அறிந்து நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். இப்போது ஒருவர் அளவுக்கு அதிகமாக நீரைப் பருகினால் சந்திக்கக்கூடிய சில பக்க விளைவுகள் என்னவென்று பார்ப்போம்.
இதய சுமை அதிகரிக்கும்
ஒருவர் அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்கும் போது, அதனால் இதயத்தில் சுமை அதிகரிக்கும். இதயத்தின் வேலை என்ன? இரத்தத்தில் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்புவது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
இதனால் இதயம் அதிகளவு இரத்தத்தை ஒரே வேளையில் அழுத்த வேண்டியிருக்கும். இப்படி ஒரே வேளையில் அதிக அழுத்தம் கொடுத்து, நீண்ட நேரம் இப்படியே இதயம் செயல்பட்டால், இதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரித்து, பக்கவாதம் மற்றும் இதய பிரச்சனைகளுக்கான அபாயம் அதிகரிக்கும்.
எனவே ஒருவர் போதுமான அளவு நீரைப் பருகுவதோடு மட்டுமின்றி, சீரான இடைவெளியில் பருக வேண்டியதும் அவசியம்.
செல்கள் வீக்கமடையும்
உடலினுள் உள்ள செல்களின் சீரான செயல்பாட்டிற்கு போதுமான அளவு நீர் இருந்தால் போதுமானது. ஆனால் ஒருவர் அளவுக்கு அதிகமாக நீரைக் குடிக்கும் போது, செல்களின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும்.
எப்போது ஒருவர் அதிகளவு நீரைப் பருகுகிறாரோ, அப்போது இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து, எலக்ட்ரோலைட்டுகள் குறையும். இதனை சரிசெய்வதற்கு, இரத்தமானது அதிகளவு நீரை செல்களுக்கு அனுப்பி, செல்களை வீக்கமடையச் செய்யும்.
இதனால் செல்களின் சீரான செயல்பாடு பாதிக்கப்படும். இதன் விளைவாக சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
கல்லீரல் பிரச்சினைகள்
நாம் உண்ணும் உணவுகளை கல்லீரல் வளர்சிதை மாற்றம் செய்யும். இந்நிலையில் அதிகளவு நீரைக் குடிக்கும் போது, கல்லீரலின் செயல்பாடு பாதிப்பிற்கு உள்ளாகும். அதிலும் அதிக இரும்புச்சத்து நிறைந்த பானத்தை குடிக்கும் போது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும்.
பொதுவாக அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து கல்லீரலுக்கு நல்லதல்ல மற்றும் இது வளர்சிதை மாற்றம் செய்யும் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்திவிடூம். ஆகவே கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீரைக் குடிக்க வேண்டாம்.
மூளையில் நீர்க்கட்டு
நீரை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, மூளையில் நீர்க்கட்டு ஏற்படுவது மிகவும் அரிதாகவே நிகழும். இருப்பினும் இந்நிகழ்வு ஏற்பட்டால், உயிரையே இழக்கும் வாய்ப்புள்ளது. எப்படி நம் உடலினுள் உள்ள செல்களுக்கு நீர் அதிகம் கிடைத்தால் வீக்கமடையுமோ, அப்படித் தான் மூளையில் உள்ள செல்களுக்கு அதிகளவு நீர் கிடைக்கும் போது வீக்கமடையும்.
ஆனால் மூளையில் உள்ள எலும்புகள் மிகவும் வலிமையானது. எனவே செல் வீக்கமடையும் போது, தலையில் புடைப்பு ஏதும் ஏற்படாமல், அது மூளையில் நீர்க்கட்டுகளாகிவிடும். இதனால் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திப்பதோடு, ஞாபக மறதி மற்றும் சில சமயங்களில் கோமாவிற்கும் செல்லும் வாய்ப்புள்ளது.
அடிவயிற்று வலி
ஒருவர் அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்கும் போது, அதனால் வயிறு நிறைந்துவிட்ட உணர்வைப் பெறுவோம். அத்துடன் சில சமயங்களில் வயிற்று வலியையும் சந்திப்போம். இதற்கு வேறு சில காரணமும் உள்ளது.
அளவுக்கு அதிகமாக நீரைக் குடிக்கும் போது, இரத்தத்தில் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவு குறைவும். இதன் விளைவாக வயிற்று வலியுடன், வயிற்று எரிச்சலையும் சந்திக்கக்கூடும். பல நேரங்களில் உடலில் நீரின் அளவு அதிகரிக்கும் போது, பொட்டாசியம் கரைய ஆரம்பித்துவிடும். இதனால் அடிவயிறு வீங்குவதோடு, மூட்டு மற்றும் கால்களில் வலியை சந்திக்க நேரிடும்.