நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி திரைப்படம் ஒன்று உருவாக இருக்கிறது.
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா. இவருக்கு 4 அண்ணன்கள் உள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே என விரக்தியில் இருந்த அனிதா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அனிதாவின் வாழ்க்கை படமாக எடுக்க இருக்கிறது. இந்த படத்திற்கு டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என பெயரிடபட்டுள்ளது.
மேலும், இந்த படத்தில், நெட்டிசன்களால் அதிகளவில் பேசபட்டு வரும் பிக்பாஸ் ஜூலி கதாநயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், கதாநாயகி ஜூலி தாமரையில் அமர்ந்தாற் போல் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மற்றும் கையில் புத்தகத்துடன் உள்ளார்.
சமூக வலைதளத்தில் வைரலாகும் இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரைக் கண்டு நெட்டிசன்கள் தங்கை அனிதாவின் இடத்தில் ஜூலியா என தாறுமாறாக திட்டி வருகின்றனர்.