தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடக காதலால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி.
இந்திய மாநிலமான தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகிலுள்ள பெருமாள்குளத்தை சேர்ந்த சிவபெருமாள் மகள் பத்மா என்கிற பத்திரகாளி. 21 வயதான பத்திரகாளி கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டுச்சென்று அதே ஊரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இரு தினங்களுக்கு முன்பு தனது காதல் கணவர் தனது தாயாருடன் சேர்ந்து வரதட்சனை கேட்டு அடித்து விரட்டி விட்டதாக கூறி தனது தாய் வீட்டில் தஞ்சமடைந்தார் பத்திரகாளி ..!
காதல் நாடகத்தால் ஏமாந்து போன தனது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை குறித்து, நியாயம் கேட்க சென்ற இடத்தில் பத்திர காளியின் தந்தையையும், சகோதரரையும் மோகன்ராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களும் பதிலுக்கு திருப்பி தாக்கி உள்ளனர். இதில் இரு தரப்புக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் ஒருதலை பட்சமாக பத்திரகாளியின் சகோதரரையும் ,தந்தையும் மட்டும் பிடித்துச்சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செவ்வாய் கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த பத்திரகாளி, சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பதற்கு பதில் சொல்வது போல அவர்கைபட எழுதி வைத்திருந்த 2 பக்க கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அதில், 2 பேரும் விருப்பபட்டு வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதாகவும், ஆரம்பத்தில் அன்பாகவும் பாசமாகவும் இருந்த காதல் கணவன், சில நாட்களில் தன்னை மறந்து தனிமையில் வேறொரு பெண்ணுடன் செல்போனில் பேசிவந்ததை கண்டறிந்து கண்டித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அவரும், அவரது அம்மாவும் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், அதன் பின்னரும் அந்த பெண்ணிடம் பேசுவதை மோகன்ராஜ் தொடர்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் பத்ரகாளி..!
ஒரு கட்டத்தில் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வெளியே துரத்தினர். நான் எவ்வளவோ கெஞ்சியும் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை.
இதற்கு நியாயம் கேட்க சென்ற தனது தந்தையையும், சகோதரரையும் ஒருதலை பட்சமாக பொலிசார் பிடித்து சென்றதால் தன்னால் தான் அனைவருக்கும் பிரச்சனை என்று இந்த சோக முடிவை தேடிக்கொள்வதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தனது மரணத்திற்க்கு காதல் கணவர் மோகன்ராஜும் அவரது தாயின் வரதட்சனை கொடுமையுமே காரணம், அவர்களை கைது செய்யுங்கள் என்றும் தப்பு செய்யாத தனது தந்தையையும், சகோதரரையும் விட்டுவிடுங்கள் என்றும் கடிதத்தின் மூலம் பதில் கூறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு பெற்றோரை விட நல்ல பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்பதை பெண்கள் உணர்ந்தாலே, பருவ வயதில் காதல் நாடகத்தில் யாரோ ஒருவரிடம் சிக்கி வாழ்க்கையை தொலைக்கும் இது போன்ற விபரீத சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாம்..