சொந்த ஊரில் வீடு கட்டப்போகும் டி.டி.வி. தினகரன்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, டி.டி.வி. தினகரன் நேற்று இரவு தேனி வந்தடைந்தார். முன்னதாக, பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவி’யின் ஆதரவாளர்கள் பேனர் வைப்பது தொடர்பாக போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். அப்போது, பெரியகுளத்தில் பேசிய டி.டி.வி. தினகரன், ‘’கடந்த 1999-ம் வருடம், பெரியகுளத்தில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்காக பிரசாரம் செய்ய இங்கே வந்திருந்தார். அப்போது, அவருக்கு எவ்வாறு வரவேற்பு கொடுத்தீர்களோ, அதேபோல இப்போது எனக்கு வழங்கியிருக்கிறீர்கள். இறைவன் என்னை தஞ்சாவூரில் அறிமுகம் செய்திருந்தாலும், ஜெயலலிதா என்னை அரசியலில் பெரியகுளத்தில் தான் அறிமுகம்செய்தார். தஞ்சாவூர் போன்று பெரியகுளமும் என் சொந்த ஊர்தான். ஐந்து ஆண்டுகளில் பெரியகுளத்தில் வீடு கட்டி, இங்கிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்வேன்’’ என்று பேசினார். மேலும், பெரியகுளம் பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதையும், பெரியகுளத்தில் தங்கியிருந்ததையும் நினைவுகூர்ந்தார். அடுத்த மாதம், ஆறு நாள்கள் தேனியில் தங்கியிருந்து, கிராமம் தோறும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.