காலால் உதைத்த பொலிசார்: சம்பவ இடத்திலே இறந்த கர்ப்பிணி!

தமிழகத்தில் ஹெல்மெட் போடாத தம்பதியை பொலிசார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரவுண்டானா அருகே காவல் ஆய்வாளர் கமராஜ் தலைமையில், ஹெல்மெட் அணியாதவரை பிடிக்கும் சோதனையில் பொலிசார் ஈடுபட்டனர்.

அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா மற்றும் உஷா என்ற தம்பதியினர் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளனர்.

இதைக் கண்ட பொலிசார் அவர்களை வழிமறித்துள்ளனர். ஆனால் ராஜா வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் பின் தொடர்ந்து சென்ற ஆய்வாளர் காமராஜ் ஒரு கட்டத்தில் தர்மராஜின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார்.

இதில் தர்மராஜ்-உஷா நிலைதடுமாறி அங்கிருந்த சாலையில் விழுந்துள்ளனர். அந்த நேரத்தில் பின்னால் வந்த வேன் ஒன்று 3 மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்த உஷாவின் மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, ஆய்வாளர் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் ஷோபாவிடம் பொதுமக்கள் முறையிட்டுள்ளனா். ஆனால் ஷோபா காவலரை எதுவும் சொல்லாமல் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் வாகனத்தின் மீது கற்களை எறிந்ததுடன், ஆய்வாளரை கைது செய்யும் படி கூறியுள்ளனர். அதன் பின் ஆய்வாளர் காமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.