• பள்ளிவாசல்கள்; 50 வர்த்தக நிலையங்கள், 20 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
• கைதான 24 பேருக்கு விளக்கமறியல்
• விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் கையளிப்பு
• கண்டி நிர்வாக பகுதியில் ஊரடங்கு
கண்டி, தெல்தெனிய, பள்ளேகல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் நேற்று பகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினர் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலும் பதற்ற நிலைமை தொடர்ந்து வருகின்றது. இதேவேளை தெல்தெனிய பொலிஸ் பிரிவின் திகன- ராஜவல பகுதியில் இனவாதிகளால் தீ மூட்டப்பட்டு எரிக்கப்பட்ட வீட்டுக்குள் இருந்து முஸ்லிம் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
21 வயதுடைய அப்துல் பாஸித் எனும் இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது ஜனாஸா நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந் நிலையில் நேற்று முன் தினம் கண்டி மாவட்டம் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை அது தளர்த்தப்பட்டதுடன் மீண்டும் தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் மறு அறிவித்தல் வரை ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் தெல்தெனிய – திகன பகுதியை மையப்படுத்தி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சந்தேக நபர்களையும் அதன் பின்னணியில் செயற்பட்டோரையும் கைது செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைவாக சிறப்புக் குழுவொன்று நேற்று தெல்தெனிய நோக்கி சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
நேற்றைய தினம் வன்முறைகள் எதுவும் குறித்த பகுதியில் பதிவாகாத போதும், பொலிஸ் விஷேட அதிரடிப்படை மற்றும் இராணுவ பாதுகாப்பு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஏற்கனவே முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 சந்தேக நபர்களையும் நேற்று காலை தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ததாகவும் அதன்போது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவன் கூறினார்.
இதனிடையே இராணுவ பாதுகாப்பானது கண்டி நகருக்கும், தெல்தெனிய , திகன மற்றும் கட்டுகஸ்தோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக படையணியொன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கேசரிக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நேற்று முன் தினம் கண்டி முழுவதற்கும் ஊரடங்கு அமுல் செய்யப்பட்ட நிலையில், வன்முறையாளர்கள் அந்த நேரத்திலும் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.
குறிப்பாக திகன முதல் கெங்கல்ல, பலகொல்ல வரையிலான பகுதிகளில் உள்ள அனைத்து முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இடையில் இருந்த தமிழர்களின் கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரும்பான்மையினக்குழுவினர் தமது வெளிமாவட்ட வசிப்பிடம் நோக்கி செல்லும் வழியில் திகனவில் மட்டுமன்றி கட்டுகஸ்தோட்டை வரையுள்ள பல முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இதனால் பல்லேகல பொலிஸ் பிரிவிலும் தெல்தெனிய பொலிஸ் பிரிவிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிலும் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
திகனவில் மட்டும் முஸ்லிம்களுக்கு சொந்தமான 15 கடைகள் வரை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. மொத்தமாக கட்டுகஸ்தோட்டை, தெல்தெனிய மற்றும் பல்லேகலை பொலிஸ் பிரிவுகளில் 10 பள்ளிவாசல்கள், 50 வரையிலான வர்த்தக நிலையங்கள் 30 வரையிலான வீடுகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
இவற்றில் ஒரு பள்ளிவாசல் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் எனையவை பகுதியளவிலும் சிறு அளவிலும் சேதங்களுக்கு உள்ளகையுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Srilanka: Muslim-owned shops in Uguressapitiya, Katugastota attacked around 11.30 am and 1 pm today, say owners and residents. #lka @the_hindu pic.twitter.com/uFaknJtPlo
— Meera Srinivasan (@Meerasrini) March 7, 2018
#Srilanka: Several Muslim-owned shops in #Akurana in flames following mob attack this morning. #lka @the_hindu pic.twitter.com/SIOT4tCybg
— Meera Srinivasan (@Meerasrini) March 7, 2018