கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் குடும்ப வாழ்க்கையில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அவருடைய மனைவி ஹசின் ஜஹான், ஷமி மீது பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
ஷமிக்குப் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் தன்னை ஓயாது துன்புறுத்துவதாகவும் சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ள ஹசின் ஜஹான், தன் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக ஷமி, பல பெண்களுடன் நடத்திய உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் இணைத்துள்ளார். மேலும் ஷமியின் காரில் கருத்தடைப் பொருள்களும் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷமியின் மனைவி ஹசின் ஒரு பேட்டியில் கூறியதாவது: நான் வெளியிட்ட ஆதாரங்கள் கொஞ்சம்தான். மேலும் மோசமான செயல்களை அவர் செய்துள்ளார்.
அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு உண்டு. ஷமியின் குடும்பம் என்னைக் கடந்த மூன்று வருடங்களாகக் கொடுமைப்படுத்தி வருகிறது.
ஷமியின் தாயும் அவரது சகோதரரும் என்னை மோசமாகத் திட்டுவார்கள். அவர்களுடைய கொடுமை காலை 3 மணி வரை கூட நீளும். என்னைக் கொல்லவும் அவர்கள் விரும்பினார்கள்.
தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியவுடன் என்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார். சிலகாலமாக இப்படித்தான் செய்துவருகிறார். இதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாது.
என் வாழ்க்கைக்காகவும் என் மகளுக்காகவும் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறார்.
பல பெண்களுடன் நடத்திய உரையாடல்களை அவருடைய செல்பேசி மூலமாக அறிந்தபிறகு என்னால் பொறுமையாக இருக்கமுடியவில்லை. ஷமியின் காரில் கருத்தடைப் பொருள்கள் இருந்துள்ளன.
என்னிடமுள்ள அனைத்து ஆதாரங்களையும் கொண்டு ஷமி மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். இதற்குப் பிறகும் தன் தவறை அவர் உணராமல் என் மீது கோபத்தை வெளிப்படுத்தி என் நலனுக்காக அமைதியாக இருக்கும்படி மிரட்டினார்.
ஷமியின் கள்ளத் தொடர்புகளையும் என் மீதான கொடுமைகளையும் ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் சொல்லியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஹசின் ஜஹானின் வழக்கறிஞர் கூறியதாவது: ஷமி திருந்துவார் என நினைக்கிறோம். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: என் சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகளை நான் மறுக்கிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கையை நாசமாக்க சதி உருவாக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஷமி – ஹசின் ஆகிய இருவரும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.