மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இரண்டு வீட்டினை இலக்கு வைத்து பொருத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) மீட்கப்பட்டுள்ளன.
ஆரையம்பதி 03ஆம் வட்டாரம் எல்லை வீதியில் இரண்டு வீடுகளை இலக்கு வைத்தே நேரங்கணித்து வெடிக்கும் வகையில் இந்த குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு வீட்டில் நேரங்கணித்து வெடிக்கும் குண்டும் மற்றைய வீட்டில் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், வீட்டின் வேலியில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஸ்ரீலங்கா என்ற பெயர் எழுதப்பட்ட இலக்கங்களுடன் பதாதையொன்றும் தொங்கவிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு விரைந்த குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினருடன், மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.