தந்தை மற்றும் மருமகன் மகனை அடித்து கொலை!

பொகவந்தலாவ – பொகவனை தோட்டபகுதியில் தடியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகனுக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறி தந்தையும், மருமகனும் இணைந்து தலைப்பகுதியில் கடுமையாக தடியால் தாக்கியதன் காரணமாக மகன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விராணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் 37வயதுடைய ஆறுமுகம் சிவசூரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் நாளை ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.