சமூக வலைத்தள முடக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட இனவாத மோதல்!

சமூக வலைத்தளங்களை முடக்கியமையினால் பாரிய இனவாத மோதலை கட்டுப்படுத்த முடிந்ததாக பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.

கண்டி மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இனவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்காக பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

இந்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு பிரதானிகளின் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

கண்டி வன்முறை சம்பவம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் ,பேஸ்புக் சமூக வலைத்தளத்தை கட்டுப்படுத்தும் முறை தொடர்பில் ஜேர்மன் மற்றும் பிலிப்பின்ஸ் நாடுகளிடம் காணப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்பு பிரதானி பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக மின்னஞ்சல் மற்றும் இணையத்தளங்களின் கட்டுப்பாடுகளுக்கு சீனா பயன்படுத்தும் தொழில்நுட்ப முறை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையின் போது சீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.