சீனாவில் திருமணம் ஆகாத பெண்களை இப்படித்தான் அழைப்பார்களாம்!

பாரம்பரியத்தால் மூழ்கிய பழமைவாத ஆசிய சமூகம் பழமையான கருத்துக்களை முன்வைத்து மேற்கத்திய உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்துகிறது. ஆனால் சீனாவில் பின்பற்றப்படும் ‘ஷெங் நூ’ அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

27 வயதைக் கடந்தும் உங்களுக்கு திருமணமாகவில்லையா? அப்படி என்றால் சீனாவில் பெண்களை ’எஞ்சிய பெண்’ என்றே அழைப்பார்கள்.

ஷெங் நூ எனும் வார்த்தையே அப்படியே மொழிபெயர்த்தால் ’எஞ்சிய பெண்கள் என்று பொருள்படும். அனைத்து சீன பெண்கள் கூட்டமைப்பு இந்த தரக்குறைவான வார்த்தையை பிரபலப்படுத்தியது.

இதில் முரண்பாடு என்னவென்றால் இந்த கூட்டமைப்பு பெண்களின் உரிமைக்கான நிறுவனம்.

எஞ்சிய பெண்கள்

27 வயதைக் கடந்தும் திருமணமாகாத பெண்களை எஞ்சிய பெண்கள்என குறிப்பிடுவது, ஒரு கடையில் வாடிக்கையாளர்களால் நிராகரிக்கப்பட்ட தரக்குறைவான எஞ்சிய பொருளுடன் ஒப்பிடுவதைப் போல கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது ஷெங் நூ எனப்படும் வார்த்தை.

’ஷெங் நூ’ என்ற வார்த்தையின் பொருள் ’27 வயதைக் கடந்தும் திருமணமாகாத பெண்கள்’ என்று சீன மக்கள் குடியரசின் கல்வி அமைச்சகம் 2007-ல் ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டு தேசிய அகராதியில் சேர்த்தது.

மேலும் இந்த அமைச்சகம் சற்று விளக்கமாக ‘வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் அதிக எதிர்பார்ப்புகள் கொண்டதால் கணவனை தேர்ந்தெடுக்க முடியாத நிலை” என்று அதற்கடுத்த அறிக்கையில் விரிவாக வெளியிட்டுள்ளது.

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச பெண்கள் தினத்திற்கு பிறகு அனைத்து சீன மகளிர் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரையை ”எஞ்சிய பெண்கள் எங்கள் பரிதாபத்திற்கு தகுதியுடையவர்கள் அல்ல” என்கிற தலைப்பில் பதிவு செய்தது.

அதில் ஒரு பகுதியில், அழகான பெண்கள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்ள அதிகம் படிக்கவேண்டியது அவசியமில்லை. ஆனால் சுமாராகவோ அழகற்று இருக்கும் பெண்களில் நிலை மோசமாக இருக்கும்.

குறையும் மதிப்பு

இவர்கள் போட்டியில் தங்கள் நிலையை மேம்படுத்த அதிகம் படிக்கலாம் என்று நினைப்பார்கள். இதில் சோகம் என்னவென்றால் பெண்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களது மதிப்பு குறைந்துகொண்டே இருக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

ஏனெனில் எம்ஏ அல்லது பிஎச்டி படித்து முடிக்கும் சமயம் அவர்களின் வயது ஏற்கெனவே அதிகரித்திருக்கும் என்று பதிவு செய்துள்ளது.