சவுதி அரேபியாவில் தமாம் நகரில் பணி பெண்ணாக கடமையாற்றிய போது உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடபுஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலமே இரண்டரை வருடங்களுக்கு பின்னர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வறுமை காரணமாக 1995 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற குறித்த பெண், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாய் உயிரிழந்ததாக கிடைத்த தகவலுக்கு அமைய அவரது மகன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி உடலை நாட்டு கொண்டுவருதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், இரண்டரை வருடங்களுக்கு பின்னரே சடலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சடலம், மரண விசாரணைகளுக்காக நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.