வெளிநாடு ஒன்றில் தவிக்கும் பெண்! காப்பாற்றுமாறு கோரிக்கை!

திருகோணமலை – பெரியகுளம் பகுதியிலிருந்து மத்திய கிழக்கு நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண் நாடு திரும்ப முடியாமல் துன்பங்களை அனுபவிப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவருடைய ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையிலும் நாட்டுக்கு அனுப்பாது சித்திரவதை மேற்கொள்வதாக குறித்த பெண்ணின் மகனால் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு அமைச்சு மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் மறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – பெரியகுளம், நிலாவெளி பகுதியைச் சேர்ந்த சண்முகராசா சாரதாதேவி என்ற பெண் கடந்த 2015.07.01 அன்று மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண்ணின் மகன் சபா சரத்குமார் தெரிவிக்கையில்,

“எனது அம்மா பணிக்கு அமர்த்தப்பட்ட வீட்டில் அவருக்கு ஒழுங்கான சம்பளம் கிடைக்கவில்லை. அவர் சித்திரவதை செய்யப்பட்டதால் அவர் பணிக்கு அமர்த்தப்பட்டு 3 மாத காலத்தில் சேவ் ஹவுஸ் ஒன்றுக்கு சென்று அதன் மூலமாக 2015.10.08 அன்று வேறு ஒரு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அந்த வீட்டிலும் சம்பளம் கொடுக்காமல் பல சித்திரவதைகளை அனுபவித்து வருகின்ற நிலையில் அவரை நாட்டுக்கு அனுப்புமாறு திருகோணமலையில் உள்ள வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக நான் கோரிய போது அவர் ஒப்பந்த காலத்திற்கு முன் வருவதானால் காசு கட்ட வேண்டும் என கூறினார்கள்.

அதனால் என்ன கஸ்டம் என்றாலும் தாங்கிக் கொண்டு 2 வருடத்திற்கு இருப்போம் என்று அம்மா தெரிவித்தார்.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து 4 மாதங்களாகியும் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பாமலும் சம்பளப் பணத்தை வழங்காமலும் அவரை அடித்து துன்புறுத்துவது மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதாக தொலைபேசியில் கதைக்கும் போது அம்மா அழுதுகொண்டு கூறினார்.

மேலும், அவர் தனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக கூறிய விபரங்களை வீடியோ பதிவு செய்துள்ளேன்.

எனவே நான் பெப்ரவரி 07ஆம் திகதி நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், ஜனாதிபதி, வெளிநாட்டு அமைச்சு மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபர் போன்றோருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.” என அவர் தெரிவித்தார்.