தற்போதைய காலகட்டத்தில் அதிகளவு பிரச்சினைகள் பேஸ்புக்காலேயே ஏற்படுவதாக யாழ். பிராந்திய பெண் உப பொலிஸ் பரிசோதகர் திருமதி- சிந்துபாமினி தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ்.உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி- சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் இடம்பெற்ற போது ‘பெண்களுக்கான பாதுகாப்பும் சட்ட நடவடிக்கைகளும்’ எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்தும் போது;
இந்தப் பேஸ்புக் என்பது ஒரு அலைவரிசை. இலங்கையில் பேஸ்புக் அலைவரிசை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அலைவரிசையைத் தொடர்ச்சியாக நிறுத்துவதன் மூலம் நாங்கள் வன்முறைகளை அரைவாசிக்கும் மேலாக குறைத்துக் கொள்ள முடியும்.
ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறைப்பாடுகள் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளாக பதியப்படுகின்றன.
தொலைபேசி அழைப்பின் மூலம் ஒருவரை கடுமையாக ஏசினாலோ அல்லது ஆபாசப்படங்களை குறுந்தகவல்கள் மூலம் அனுப்பினாலோ அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பது இலகுவானதாகவுள்ளது.
குறிப்பாக கைத்தொலைபேசிகளின் சிம்மிற்குரிய நிறுவனங்கள் பொறுப்புக் கூற வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இதன் மூலம் தொடர்பு கொள்ளும் இலக்கத்திற்குரிய நபரை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. ஆனால், பேஸ்புக் இயக்குபவர்களை அடையாளம் கண்டு கொள்வது சிரமமானதாகவிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.