இனங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இரு பாடசாலை மாணவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினமும், நேற்றும் ஹோமாகம, கொள்ளுப்பிட்டி பகுதிகளில் வைத்து அவர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.ஹோமாகமவில் கைது செய்யப்பட்ட மாணவனுக்கு 17 வயது எனவும் கொள்ளுப்பிட்டியில் நேற்று காலை கைது செய்யப்பட்டவருக்கு 18 வயது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியொன்றில் தடுத்து வைக்க நீதிவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.இதனிடையே, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதம் பரப்பும் மேலும் பலர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .