சுதந்திரக் கிண்ண முத்தரப்பு இருபதுக்கு 20 போட்டித் தொடரின் மூன்றாது லீக் ஆட்டம் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.இப் போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய உற்சாக மிகுதியில் உள்ள இலங்கை அணி இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கவே எத்தனிக்கும்.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் சுதந்திரக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமானது. இத் தொடரில் இலங்கையுடன் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.இத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.இப் போட்டியில் குசல் ஜனித் பெரேராவின் ருத்ரதாண்டவத்தால் இலங்கை அணி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்த விரக்தியில் இருந்த இந்திய அணி நேற்று முன்தினம் தனது இரண்டாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடியது.இப் போட்டியில் ஆறு விக்கெட்டுக்களால் இந்திய அணி வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்துக்கொண்டது.
இந்நிலையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்று தமது இரண்டாவது போட்டியில் மோதுகின்றன.நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றிகளைக் குவித்து வரும் இலங்கை அணி இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும்.
நம்பிக்கையில் களமிறங்குகின்றது.அதேபோல் மறுமுனையில் பயிற்சியாளரை இழந்து, இப்போது தலைவரையும் இழந்து இக்கட்டான நிலையிலுள்ள பங்களாதேஷ் அணி கடந்த போட்டியில் இந்திய அணிக்கு சற்று நெருக்கடி கொடுத்தே ஆடிவந்தது.அதனால், இலங்கைக்ெகதிரான போட்டியிலும் பங்களாதேஷ் அணி சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம் பங்களாதேஷ் அணி முதல் வெற்றியை ருசிக்குமா அல்லது இலங்கையிடம் வீழுமா என்று.