உறுப்பு மாற்றுக்காக உருவாக்கப்படும் பன்றிகள்: தெரியுமா?

ஜப்பானில் மனிதர்களின் உறுப்பு மாற்றுக்காக அந்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விஷேசமாக பன்றிகளை உருவாக்கி வருகின்றனர்.

உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்றவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் உறுப்புகள், அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது உடல் உறுப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பன்றிகளின் உடலில் இருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டு, மனிதர்களுக்கு பொருத்தப்பட்டு வருகிறது.

ஏனெனில், பன்றிகளின் உடல் உறுப்புகள் மனிதர்களுடன் ஒத்துப் போவதால், இவ்வாறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நியூசிலாந்து, ரஷியா போன்ற நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு பன்றிகளின் உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன.

ஆனால், ஜப்பானில் இத்தகைய உறுப்பு மாற்றுக்காகவே விஷேசமாக பன்றிகள் உருவாக்கப்படுகின்றன.

ஜப்பானில் உள்ள மெய்ஜி பல்கலைக்கழகம் மற்றும் கியோடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இவ்வாறான பன்றிகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் முதற்கட்டமாக, நோய் விளைவிக்கும் வைரஸ்கள் இல்லாத நல்ல நிலையில் உள்ள பன்றிக்குட்டிகள் உருவாக்கப்படுகின்றன.

அதன் பின்னர், அவை நன்கு சுத்திகரிக்கப்பட்டு சுத்தமாக பாலூட்டி வளர்க்கப்படுகின்றன. அவை 1.8 கிலோ எடையை எட்டியுடன், அந்த பன்றிகளின் உடலில் இருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டு மனிதர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்படுகிறது.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ‘இந்த பன்றிகளினால் செய்யப்படும் அறுவை சிகிச்சை, 40 விதமான கிருமிகளின் தாக்குதலில் இருந்து, உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவரை பாதுகாக்கிறது’ என தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு, ஜப்பான் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறைகளின் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறையின் கீழ் இத்தகைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.