தனது மகளை துடிதுடிக்க கொலை செய்ய எப்படி மனது வந்தது என, கொலை செய்யப்பட்ட அஸ்வினியின் தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கல்லூரி வாசலில் படுகொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினியின் தாய் சங்கரி, தனது மகள் குறித்தும், கொலையாளி அழகேசன் குறித்தும் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து சங்கரி கூறுகையில், ‘என் கணவர் இறந்த பிறகு, வீடு வீடாக சென்று பாத்திரம் தேய்த்து சம்பாதித்த பணத்தில் மகனையும், மகளையும் படிக்க வைத்தேன்.
அஸ்வினி பிறந்ததே அதிர்ஷ்டம் என்று நினைத்து, நான் கஷ்டப்பட்டாலும் அவள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். அவளை கல்லூரியில் படிக்க வைக்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை.
ஆனால், அவள் ஆசைப்பட்டாள் என்ற காரணத்துக்காக, கஷ்டப்பட்டு கல்லூரியில் சேர்த்தேன். அஸ்வினி எங்களின் மீது மிகவும் பாசமாக இருந்தாள். படித்து முடித்து சீக்கிரமே வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவேன். வீடு, கார் வாங்கித் தந்து உன்னை ராணி மாதிரி பார்த்துக் கொள்வேன் என சிரித்துக் கொண்டே கூறுவாள்.
ஆனால், அழகேசன் உருவத்தில் வந்து எமன் என் மகளை கொண்டு சென்றுவிட்டான். அவளது உடலைப் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை.
அவனும்(அழகேசன்) அக்கா, தங்கையுடன் பிறந்தவன்தானே?, துடிதுடிக்க ஒரு பெண்ணைக் கொல்ல அவனுக்கு எப்படி மனம் வந்தது? அவன் நல்லவன் இல்லை. எங்கள் குடும்பத்துக்கு பணம் கொடுத்து உதவியதாக அவன் சொல்வது துளியும் உண்மை இல்லை.
அவனது நடவடிக்கை சரியில்லை என்பதால் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். பொலிசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், மகளை இழந்திருக்க மாட்டேன்.
அவளுக்கு ஏற்பட்ட கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடந்துவிடக்கூடாது. கொலையாளிக்கு தூக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.