டெல்லியில் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் சவுகான்(23). இவர் ஷதாரா பகுதியில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
டெல்லியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்ற சவுகான், 11ஆம் வகுப்பு படிக்கும் தனது மாமா மகனுடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளார்.
அப்போது, சிறுவன் வீட்டிற்குள் சென்று தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்துள்ளான். அதனை வைத்து செல்பிக்கு அவன் போஸ் கொடுத்துள்ளான்.
அப்பொழுது, எதிர்பாராதவிதமாக சிறுவனின் கை துப்பாக்கியின் விசையில் பட்டு, குண்டு வெளியேறியுள்ளது. அவ்வாறு வெளியேறிய குண்டு, அருகில் இருந்த சவுகான் மீது பாய்ந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த சவுகான், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
சவுகானின் மாமா பிரோமோத் சவுகானின் பெயரில் துப்பாக்கிக்கு உரிமம் வாங்கப்பட்டிருந்ததும், சிறுவன் எடுக்கும் அளவுக்கு கவனக்குறைவாக பிரோமோத் அதனை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து பிரோமோத் சவுகானிடம் விசாரணை நடைபெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.