யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றிய நடராஜன் கடந்த வாரத்துடன் புதுடில்லிக்கு மாற்றலாகிச் சென்றுள்ளார்.
அவருக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட நிகழ்வுகள் அரசியல் ரீதியான விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளன.
இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த பெப்ரவரி 25ம் திகதி ஒரு நிகழ்வு இடம்பெற்றது.
அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் கையளித்த நினைவுப் பரிசு, முதலமைச்சர் வெளியிட்ட கருத்து என்பனவற்றைப் போலவே முதலமைச்சர் தொடர்பாக நடராஜன் வெளியிட்ட கருத்தும் அரசியல் விவாதங்களைத் தூண்டியிருந்தன.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியத் துணைத் தூதுவருக்கு நினைவுப் பரிசாகக் கொடுத்த வாள், இந்தியாவிடம் அடிபணியும் அவரது மனோநிலையை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என்று கோரியிருந்த முதலமைச்சர் இனியாவது ஒரு விறுவிறுப்பான வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள் என்றும் இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
அதே நிகழ்வில் உரையாற்றிய இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் யாழ்.நகரில் இந்தியா அமைக்கும் கலாசார மையத் திறப்பு விழாவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்பார் என்று கூறியதும் அரசியல் உள்நோக்குடன் பார்க்கப்பட்டது.
அவர் ஒருவேளை முதலமைச்சரின் பதவிக்காலம் வரும் செப்டம்பருடன் முடிவடைவது தெரியாமலும் கூறியிருக்கலாம்.
சிலவேளைகளில் அதனைத் தெரிந்து கூட மீண்டும் அவரே முதலமைச்சராக வேண்டும் என்ற தனிப்பட்ட அல்லது இந்தியாவினது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் அவ்வாறு கூறியிருக்கலாம்.
எது எவ்வாறாயினும் இந்த மூன்று விவகாரங்களும் ஊடகங்களிலும் அரசியல் மட்டங்களிலும் விவாதக்குரிய விடயங்களாக மாறியிருந்தன.
இந்த நிகழ்வுக்குப் பின்னர் தான் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.. அதில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்திய விவகாரத்தையும் தொட்டுச் சென்றிருந்தார்.
சில அரசியல் கட்ஹசிகள் நாங்கள் இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணுவதை விரும்பவில்லை. தமிழ் மக்களுக்கு போரின் கடைசி நாட்களில் நடந்தவற்றுக்கு இந்தியாவும் பொறுப்பு என்ற முறையில் அவ்வாறான ஓர் எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம்.
ஆனால் அன்றைய நிலை வேறு. இன்றைய நிலை வேறு. இந்தியாவின் அனுசரணை இல்லாமல் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமது நியாயமான குறிக்கோள்களை அடைய முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களும் எம்முள் இருக்கின்றார்கள்.
ஆகவே எமத்மிடையே இது பற்றிய கருத்து வேறுபாடுகளை முடிந்தளவு நீக்குவது அவசியமாகின்றது என்று பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றியிருந்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தக் கருத்து அவர் இந்தியாவின் பக்கம் சாய்கிறார் என்ற பரவலான ஊகங்களை எழுப்பியிருந்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் கட்சி. பேரவையின் அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சரின் இந்தக் கருத்தை அடுத்து அவர் இந்தியச் சார்பு நிலைப்பாட்டை எடுப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக முதலமைச்சருடன் இந்த விடயத்தில் ஈபிஆர்எல்எவ் முரண்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன.
ஆனால் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் இதே ஈபிஆர்எல்எவ்வும் இது போன்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிட்டது.
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈபிஆர்எல்எவ்வும் இணைந்து போட்டியிடும் பிரகாசமான வாய்ப்புகள் இருந்த போது திடீரென தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஒட்டிக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது ஈபிஆர்எல்எவ். அப்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது.
சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தியாவுக்குச் சென்று திரும்பியதும் இந்த முடிவை எடுத்தார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு. இப்போது முதலமைச்சர் மீதும் அதே குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கிறது.
அதனைச் சார்ந்த விமர்சனங்களும் வசைபாடல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தான் வடக்கு மாகாண சபையின் சார்பில் கடந்த வாரம் நடராஜனுக்காக நடத்தப்பட்ட பிரிவுபசார விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு தாம் அடிபணிந்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கிறார்.
இந்தியாவுடனான நட்புறவை அவர் வலியுறுத்தும் வகையிலேயே அந்த உரை அமைந்திருந்தது. அது மாத்திரமன்றி கசப்புணர்வுகள், நம்பிக்கையீனங்கள், சந்தேகப்பார்வை ஆகியவற்றைப் புறந்தள்ளி வைத்து எமது இலக்கை அடைவதற்காக இந்தியாவுடன் பரஸ்பர நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டிய காலம் இது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
முதலமைச்சரின் இந்தியா தொடர்பான நிலைப்பாடும் கருத்துக்களும் அவரை மையப்படுத்தி அரசியலை முன்னகர்த்த முயன்ற சில தரப்பினருக்கு ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சீனாவின் வாலைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து நிலைப்பாட்டை அண்மையில் வலியுறுத்தி வரும் தரப்பினர் இந்தக் கருத்துக்களால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூட இந்தியா தொடர்பான புரிந்துணர்வைக் கொண்டவராக இருந்தாலும் அவரை இந்திய மத்திய அரசு பெரிதாக அரவணைத்தது என்று கூற முடியாது.
நான்கு ஆண்டு பதவிக்காலத்தின் கடைசி மாதங்களை எண்ணிக் கொண்டிருக்கும் அவருக்காக கடைசி வரையில் புதுடெல்லியில் சவுத் புளொக் கதவுகள் திறக்கப்படவில்லை.
இந்தியாவில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவும் கூட கிட்டத்தட்ட ஒற்றையாட்சி மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாடு புதுச்சேரி மேற்குவங்கம் என்று பல மாநிலங்களில் ஆளுநர்கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். இது மாநில சுயாட்சியை, சம்ஷ்டிக் கொள்கைகளை கேள்விக்குட்படுத்துகிறது.
தனது நாட்டில் மாநிலங்களின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தும் பாஜக அரசாங்கம் இலங்கையில் மாகாணங்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கு மாத்திரம் எவ்வாறு துணை நிற்கும் என்று எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வி உள்ளது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்காக புதுடெல்லியின் கதவுகள் திறந்து விடப்படாத போதும் வடக்கு கிழக்கிற்கான பொருளாதார உதவிகளை இந்தியா வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
வடக்கு மாகாண சபைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதைவிட இலங்கையுடன் நீண்ட வரலாற்றுத் தொடர்புகளையும் பாரம்பரிய கலாசார மற்றும் ஏனைய உறவுகளையும் கொண்ட இந்தியாவுக்கு பூகோள அமைவிட ரீதியாக இலங்கை அதிலும் வடபகுதி மிகவும் முக்கியமானது.
அதனால்தான் இலங்கையில் போரைத் தீவிரப்படுத்துவதிலும் அது தனது கை மீறிச் சென்ற போது, முடிவுக்குக் கொண்டு வருவதிலும் இந்தியா கணிசமான பங்கை வகித்திருந்தது.
இந்தியாவை மீறி எதையும் செய்ய முடியாது என்ற உண்மை முதலமைச்சரால் மாத்திரமன்றி சமகாலத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனாலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
எனினும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியா தொடர்பான கருத்துக்களை தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஒரு தரப்பினரால் அவ்வளவாக ஜீரணிக்க முடியவில்லை. இதனை முதலமைச்சர் விக்னேஸ்வரனே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
மக்கள் நலனுக்காக அன்றி இந்தியாவிடம் எதனையும் யாசிப்பதற்கு எனக்குத் தேவைகள் இல்லை. எமது அரசியற் கொள்கைகளில் வழுவாது நின்று எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய அனைத்து அனுகூலங்களையும் பெற்றுக் கொடுப்பதே எமது சிந்தனை.
அதனைப் பத்திரிகைகள் கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்த நிலைப்பாடு இப்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அவரைச் சுற்றி எழுப்பப்பட்டு வந்த மாயை ஒன்று பற்றிய கேள்விகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்று அமையும் வாயப்பு, இந்திய சார்பு நிலையைக் காரணம் காட்டி இல்லாமல் செய்யப்பட்டது போலவே மாகாணசபைத் தேர்தலிலும் அத்தகையதொரு வாய்ப்பு இல்லாமல் செய்யப்படக் கூடிய வாயப்புகள் ஏற்படலாம்.
வடக்கில் தம்மை நிராகரிக்கும் தரப்புகள் ஆட்சியில் அமர்வதை இந்தியாவும் விரும்புமா என்ற பிரச்சினையும் உள்ளது. இந்தக் கட்டத்தில் தம்மை இந்திய விரோத நிலைப்பாடு கொண்டவர்கள் என்று காட்டிக்கொள்ளும் எவரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதை இந்தியா விரும்பாமல் போகலாம்.
அவர்களைத் தோற்கடிக்கவும் முயற்சிக்கலாம். ஏனென்றால் இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை அதற்கு முக்கியம். அதைவிட வடக்கு கிழக்கு இன்னும் கூடுதல் முக்கியம்.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்றில் தமக்கு சாதகமற்ற ஆட்சி ஒன்று அமைவதை இந்தியா விரும்பாது. மாலைதீவில், நேபாளத்தில் தமக்கு சாதகமற்ற ஆட்சிகள் அமைந்திருப்பதன் பாதகமான நிலையை எதிர்கொள்ளும் இந்தியா, அதுபோன்ற நிலை வடக்கில் ஏற்படுவதையும் விரும்பாது.
இது இந்தியாவினது நிலைப்பாடாக மாத்திரம் இருக்காது. இந்தியாவின் இடத்தில் எந்த நாடு இருந்தாலும் அதையே செய்யும்.
அந்தவகையில் வடக்கின் இப்போதைய அரசியல் நகர்வுகளும் அதையொட்டிய விவாதங்களும் இந்திய ஆதரவு இந்திய எதிர்ப்பு என்று இரண்டு வட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் நிலை ஒன்றை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இதுவும் பூகோள அரசியலின் ஒரு விளைவு என்றே கூற வேண்டும்.