கால் இல்லா, கை இல்லா தவளை சரி… தலையில்லா தவளை?

ஜில் ஃப்லெம்மிங் (Jill Flemming) என்ற அமெரிக்க ஊர்வன அறிஞர் சென்ற வாரம் கன்னெடிகட் காடுகளில் பல்லி இனங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு தவளை அவரது காலடியில் தாவிச் சென்றது.

அதைக் கவனித்தபோது அதை நம்புவதா என்ற குழப்பம் அவருக்கு வரக் காரணம் இருக்கத்தான் செய்தது. கண், மூக்கு, தாடை, நாக்கு என்று எதுவுமே இல்லாமல், அட தலையே இல்லாமல் ஒரு தவளையைப் பார்த்தால் யாரால்தான் நம்பமுடியும்?

உடலில் வேறு ஏதேனும் பாகங்கள் வெட்டப்பட்டு அந்தக் காயம் குணமடைந்தால் எப்படி அங்கே தழும்பு இருக்குமோ அந்த மாதிரியான அடையாளம் மட்டும் கழுத்துப் பகுதியில் இருந்தது.

தலையை இழந்தும் கூட இந்தத் தவளை தாவிக் குதிப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் நாம் அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.

குளிர்காலம் தொடங்கினால் குளிர்காய நெருப்பு மூட்டி, அடுப்பில் சுடச்சுட பலவகைப் பண்டங்கள் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டே நாம் வீட்டினுள் அமர்ந்துவிடுவோம்.

நம்மைப் போல் இப்புவியில் வாழும் வேறு சில உயிரினங்கள் குளிர்காலத்தை அவ்வளவு எளிமையாகக் கடப்பதில்லை. எல்லா உயிர்களாலும் குளிர்காலத் தட்பவெப்ப நிலையைத் தாங்கிக்கொள்ள முடியாது.

அப்படிப்பட்ட உயிரினங்கள் மற்ற காலங்களில் கிடைக்கும் உணவுகள் எதையும் வீணாக்காமல் நன்றாகச் சாப்பிடும். இப்படிச் சாப்பிடுவதால் குளிர்காலம் நெருங்கும்போது இயல்பான எடையைவிட அவை இரண்டு மடங்கு அதிகமாகிவிடும்.

பிறகு தனக்கு ஏற்ற ஓர் இடத்தில், அது குகையாகவோ இல்லை குழி, மரப்பொந்து என்று வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அங்கே சென்று கூடுதல் உணவுகளைச் சேர்த்து வைத்துவிட்டு உறங்கிவிடும்.

குளிர்காலம் முடியும் வரை உறங்கும் அவை சீஸன் முடிந்து எழுந்து வழக்கம்போல் மீண்டும் வாழத் தொடங்கிவிடும். கிட்டத்தட்ட இரண்டு முதல் ஆறு மாதங்கள் தூங்கக்கூடிய இவ்வகைப் பாலூட்டிகள், இக்காலகட்டங்களில் உணவு உண்ணவும், தண்ணீர் குடிக்கவும் கூட எழாமல் தூங்கிக் கொண்டே இருக்கும். இவ்வாறு தூங்கும் இந்த உயிர்கள் எப்படி இத்தனை நாட்கள் உயிர் பிழைத்து இருக்கின்றன?

குளிர்காலங்களில் அணில், மரத்தவளை, நத்தை, பாம்பு, வௌவால், சில வண்டு இனங்கள் போன்ற உயிர்களுக்கு உணவு கிடைப்பதில்லை.

ஆகையால் இவை மற்ற காலங்களில் நன்றாக உண்டு தேவையான ஊட்டச்சத்துகளை உடலில் சேகரித்துக்கொள்ளும். குளிர்காலம் நெருங்கும்போது அணில், வண்டுகள் எல்லாம் கூடுதல் உணவுகளைச் சேர்த்து வைத்துவிட்டு மரப்பொந்திலோ, ஆழமான மண்குழியிலோ இருக்கும் அதன் வீட்டிற்குள் படுத்துத் தூங்கிவிடும்.

சாதாரண தூக்கம் இல்லை, இது ஹைபர்னேஷன் (Hibernation) எனப்படும் ஆழ்ந்த தூக்கம். இக்காலகட்டத்தில் அதன் உடல் வெப்பம் -2 டிகிரி செல்ஷியஸ் அளவிற்குக் குறைந்துவிடும்.

அதைப் பார்த்தால் இறந்து விட்டதாகவே நாம் நினைப்போம், ஆனால் இல்லை. அந்த அளவிற்கு அசைவற்றுக் கிடக்கும் அவை சுவாசிப்பது கூட மிகவும் குறைவு. 15 நொடிகளுக்கு ஒருமுறை முதல் சில நிமிடங்களுக்கு ஒருமுறை என்று அதன் சுவாசம் நீளும்.

குளிர்காலத்தைக் கடத்தல் என்ற பொருள் கொண்டதாக ஹைபர்னேஷன் என்ற சொல் இருந்தாலும், விலங்குகள் அதைச் செய்வதற்கான காரணம் குளிர்காலத்தைக் கடப்பது மட்டுமல்ல.

உணவே கிடைக்காத அல்லது உணவே இல்லாத சமயங்களில் உயிர் வாழ்வதற்கான யுக்தியாகவே இது கருதப்படுகிறது.

உணவுப் பற்றாக்குறை ஏற்படப்போகும் சூழ்நிலைக்கு முன்னால் இவை உண்ணும் அதீத உணவு ஹைபர்னேஷன் உறக்கத்தில் இருக்கின்றபோது தேவைப்படக் கூடிய ஊட்டச்சத்துகளைக் கொடுக்கிறது.

உடலின் பாகங்கள் செயல்பட்டால் சேர்த்து வைத்த சத்துக்கள் குறைந்துவிடும் என்பதால் ரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைந்து அனைத்துச் செயல்பாடுகளும் குறைந்துவிடுகின்றன.

தூக்கம் வரும்போது காபி குடிப்பதால், வருகின்ற தூக்கம் கூடக் கலைந்துவிடும். அதற்குக் காரணம் காபியில் இருக்கும் அடினோசீன் என்ற வேதிப்பொருள்.

இந்த அடினோசீன் உற்பத்தி உறங்கும் விலங்குகளின் உடலில் தற்காலிகமாக தடைசெய்யப்படும். அத்தோடு இருதயத்தைச் சுற்றி உருவாகும் குளிர்ச்சியான வேதிமங்கள் துடிப்பினை தேவைக்கு ஏற்ப மட்டுப்படுத்திவிடும்.

இத்தகைய சூழலில் அணில்கள் மட்டும் நடுவில் உறக்கம் கலைந்து எழுந்திருக்கும். தன்னைச் சுதாரித்துக் கொண்டு சேர்த்துவைத்ததில் இருந்து கொஞ்சம் உணவை உண்டுவிட்டு மீண்டும் உறங்கிவிடும்.

14 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை இவை இப்படி எழுவதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதைக் கண்டுபிடித்து விட்டால் இந்த ஹைபர்னேஷன் உறக்கத்தை மனிதர்களும் செய்யும் வகையில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Interstellar, Passenger போன்ற ஆங்கிலப் படங்களில் மனிதர்கள் பல வருடங்களுக்கு ஒரு பெட்டியில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பது போல் காட்டப்படும்.

இந்த ஹைபர்னேஷன் (Hypersleep) உறக்கத்தின் உள்ளார்ந்த அறிவியலைப் புரிந்துகொண்டால் அதை நிஜத்திலும் சாத்தியப்படுத்த முடியும்.

விண்வெளி ஆராய்ச்சியில் அத்தொழில்நுட்பம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மருத்துவ உலகில் அது ஒரு மைல்கல்லாக அமையும்.

இந்த வகை உறக்கத்தைப் பயன்படுத்தி உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி மருத்துவம் செய்யலாம். அது பல நோய்களுக்குச் சிகிச்சைகளை எளிமைப்படுத்தும்.

இவ்வளவு நுட்பமான ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் காயங்கள் அவ்வுயிரினங்களுக்கு உறைப்பதில்லை. அது அப்படியே குணமடைந்து விடும்.

சரி, நம் தலையில்லா தவளை கதைக்கு வருவோம். கடந்த குளிர்காலத்தில், மேலே கூறிய குளிர்கால உறக்கத்தில் இருந்தபோதுதான் அந்தத் தவளை தன் தலையை இழந்திருக்க வேண்டும்.

வேட்டையாடும் விலங்கு ஒன்று ஏதோ ஒரு காரணத்தால் தன் வேட்டையைப் பாதியில் நிறுத்தி விட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆழ்ந்த குளிர்கால உறக்கத்தில் இருந்த தவளையின் ரத்த ஓட்டம் மிகக் குறைந்திருக்கும் என்பதால் ரத்தப்போக்கும் பெரிதளவில் இருந்திருக்காது.

பிறகு உறக்கத்தில் இருக்கும்போதே அக்காயம் குணமும் அடைந்திருக்க வேண்டும். வாயின்றி உண்ண முடியாமல் அது சிறிது நாட்களில் நிச்சயம் இறந்துவிடும் என்றாலும், மூக்கின்றி எவ்வாறு சுவாசிக்கிறது? மூளையின் செயல்பாடின்றி உடலால் தனித்து இயங்கமுடியாது என்று கூறுகிறது அறிவியல்.

இந்தக் கூற்றில் இருந்து இந்தத் தலையில்லா தவளை தனித்து நின்று மனிதனை ஏளனம் செய்கிறது. ஆம், அவன் அறிவியல் அறிவு இன்னும் முழுமையடையவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இந்தத் தவளை புரிய வைத்துள்ளது.