அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் விமானத்தில் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் குருதெனிய பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான யூ.ஏ.ஜயதிஸ்ஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகைத்தந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு விமானத்தினுள் உயரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு திடீர் வைத்திய அதிகாரியினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பயணி மாரடைப்பு ஏற்பட்டு விமான கழிப்பறையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் சற்று பெரியதாக இருந்தமையினால் கழிப்பறையில் இருந்து வெளியே எடுப்பதற்கு ஐந்தரை மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் உடலை எடுக்க கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
மரண விசாரணை மற்றும் சாட்சிகளுக்கமைய அவர் அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். அவரது மனைவி பாடசாலையில் ஆசிரியராக செயற்பட்டுள்ளார்.
அவர் தனது மனைவியுடன் இலங்கையில் இடம்பெறவிருந்த உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதாக நேற்று முன் தினம் அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். அவ்வாறு வரும் போது அவர் விமான கழிப்பறைக்கு சென்று திரும்பி வரவில்லை.
பின்னர் விமான ஊழியர்கள் கழிப்பறையை திறப்பதற்கு முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்துள்ளது. எனினும் பாரிய முயற்சியின் பின்னர் சிக்கியிருந்த அவரது சடலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.