ஒரு சிலரின் செயல்களால் முழு உலகமும் சிங்கள இனதை குற்றம் சுமத்துகிறது!

ஒரு சிலரின் அழிவான செயல்கள் காரணமாக முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சம்பவங்கள் ஊடாக உலகில் ஏனைய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட்டு பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல தெற்காசியாவில் வாழும் ஏனைய பௌத்த மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறை அழிவு தொடர்பான செய்தி மிக விரைவில் உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொழும்புக்கு அடுத்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வரும் நகரம் கண்டி.

மேலும் சுற்றுலாப் பயணிகளாக வரும் அரேபியர் அதிகளவில் கண்டிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அண்மையில் கண்டியில் ஏற்பட்ட நிலைமைகள் சுற்றுலா தொழிற்துறைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து உடனடியாக கவனம் செலுத்தி கண்டி நகரின் நிலைமையை துரிதமாக வழமை நிலைமைக்கு கொண்டு வருமாறு முச்சக்கர வண்டிகளை ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல இளைஞர்கள் என்னிடம் கூறினர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், வருமானம் இன்றி எப்படி வாழ்க்கை நடத்துவது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவங்கள் காரணமாக பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிங்கள சாரதியை மதுபோதையில் தாக்கிய சம்பவம் காரணமாக இந்த பிரச்சினை ஆரம்பமானது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக சட்டத்திற்கு முன் கொண்டு வருமாறு நான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டேன்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். சம்பவங்களை பரவ செய்த நபர்கள் தொடர்பிலும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த நெருக்கடியான நிலைமை கண்டியுடன் முடிவடைந்து விட்டது. கண்டியில் ஆரம்பித்த வன்முறை நாடு முழுவதும் பரவுமோ என்ற அச்சம் பலருக்கு இருந்தது.

எனினும் அப்படியான நிலைமை ஏற்படவில்லை. அததனை தடுத்து நிறுத்த எம்மால் முடிந்தது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.