சீனாவின் பட்டுப்பாதை திட்டம் சர்வதேச சமூகத்துக்கு அச்சுறுத்தலாக அமைய இடமளிக்கக் கூடாது என சர்வதேச நாடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், என்.எச்.கே என்ற ஜப்பான் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவில் மிகப்பெரிய துறைமுகமாகும்.
இந்த நிலையில், சீனா ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும், துறைமுகத்தை சீனா, தமது இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியும் என்பது தொடர்பான கரிசனையை தாம் அறிந்து வைத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த நிலையில், இருதரப்பு உறுதிப்பாடுகளையும், உடன்படிக்கையையும் மீறுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்;.
இதேவேளை, இந்து – பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திர மற்றும் திறந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்க, தமது நாட்டில் ஜப்பான் மேற்கொள்ளும் உட்கட்டமைப்பு பணிகளை ஊக்குவிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.