இலங்கை அணிக்கெதிரான விறுவிறுப்பான போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கட்டுகளால் திரில் வெற்றிபெற்றுள்ளது.சுதந்திரக் கிண்ணத் தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள் பலப்பரீட்சை நடத்தின.இந்நிலையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு – 20 போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸும் குணதிலக்கவும் நல்ல ஆரம்பத்தினை கொடுத்தனர்.
குசல் மெண்டிஸ் 57 ஓட்டங்களையும் குணதிலக்க 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியைக் காட்டி வெற்றிக்கு வித்திட்ட குசல் ஜனித் பெரேரா இம் முறையும் தனது அதிரடியால் இலங்கை அணி ஸ்தீரமான ஓட்ட எண்ணிக்கையைபெற வழிவகுத்தார்.
குசல் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் அதிரடியாக விளையாடிய உபுல் தரங்க 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப்பெற்றது.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் மஹமதுல்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இந்நிலையில் 215 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய பங்களாதேஷ் அணி இறுதியில் 5 விக்கெட்டுகளால் திரில் வெற்றிபெற்றது.
பங்களாதேஷ் அணிசார்பாக துடுப்பாட்டத்தில் முஸ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும் தமிம் இக்பால் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்நிலையில், சுதந்திரக் கிண்ணத் தொடரில் விளையாடும் 3 அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி தலா ஒவ்வொரு போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளைப்பெற்றுள்ளன.