கிரகப்பிரவேச நிகழ்வின்போது??

எல்லோருக்குமே சொந்த வீடு வேண்டும் என்கின்ற கனவு எப்போதுமே இருக்கும், நீண்ட முயற்சியின் பின்புதான் அது கைகூடும்.

நாம் காலம் காலமாக வாழப்போகும் வீட்டில் எப்பொழுதுமே மகிழ்ச்சி இருக்க வேண்டும்.

அந்த கனவு இல்லத்திற்கான புதுமனை புகுவிழா என்கின்ற கிரகப்பிரவேச நிகழ்வானது சமூக அளவில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருக்கின்றது.

பல குடும்பங்களில் உணர்வுப்பூர்வமான விழாவாக கொண்டாடப்படும் இந்நிகழ்வின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அவை,

நாள் குறித்தல்

கிரகப்பிரவேசத்திற்கான நல்ல நாளை குடும்பவழக்கப்படி தேர்ந்தெடுப்பது நல்லது.

வாஸ்து சாந்தி

கிரகப்பிரவேசம் நடக்கும் நாளுக்கு முன் தினம் ‘வாஸ்து சாந்தி’ என்ற ஹோம பூஜை நடத்தப்படும். அதாவது, புது வீட்டின் எட்டு திக்குகளிலும் வாசம் செய்யும் அஷ்டதிக் பாலகர்களுக்கான பூஜைகளும், வாஸ்து ரீதியான குறைகள் அகல வேண்டும் என்ற பூஜையும் விஷேசமாக செய்யப்படும்.

பூஜைக்கான இடம்

புது வீட்டிலுள்ள ஹாலின் மையப்பகுதியில் பூஜை மற்றும் ஹோமம் செய்வதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்படும். அதற்கு முன்னதாக அந்த இடம் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டியது முக்கியம்.

கிழக்கு முகம்

பூஜைக்குரிய கடவுள் படங்கள் அல்லது சிலைகளை கிழக்கு முகமாக வைக்கப்படுவது சம்பிரதாயமான முறையாகும். சற்று உயரமாக அதற்கேற்ற அமைப்புகளை செய்து கொள்ளவேண்டும்.

நுழையும் விதம்

புது வீட்டுக்குள் நுழைய உள்ள தம்பதிகள் தங்களது வலது காலை முன் வைத்து செல்லவேண்டும்.

கதவு, நிலை அலங்காரம்

தலைவாசல் மற்றும் கதவுநிலைகள் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்டு பொட்டிட்டு, வாசனை மலர்களால் நன்றாக அலங்காரம் செய்யவேண்டும். குறிப்பாக, நிலைகளுக்கு மேற்புறத்தில் மாவிலை தோரணம் மற்றும் பெரிய அளவிலான வாசனை மலர்களால் கட்டப்பட்ட மாலைகளை சூட்டுவது நன்று.

வாசலில் கோலம்

தலை வாசலுக்கு முன்புறம் அழகிய வண்ணங்களில் கோலங்கள் இடப்பட்டு, மலர்களால் அலங்கரித்து அதன் மத்தியில் அகல் விளக்கை ஏற்றி வைப்பது மங்களங்களை அளிக்கும்.

மங்கள பொருட்கள்

கிரகப்பிரவேச நாளுக்கு முன் தினம் மாலை நேரத்தில் உப்பு, மஞ்சள், குடம் நிறைய தண்ணீர் ஆகியவற்றை புது வீட்டின் சமையலறையில் வைக்கவேண்டும்.

திருஷ்டி சுற்றல்

கிரகப்பிரவேசம் நடத்தும் தம்பதிகள் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் திருஷ்டி பரிகாரமாக பூசணிக்காய் அல்லது தேங்காய் சுற்றி உடைத்தல் நன்று.