`அப்படித்தான் அவர்’: ரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்!- வீடியோ

`காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்லாமல் பல விஷயங்களில் நடிகர் ரஜினிகாந்த் அப்படித்தான் இருக்கிறார்” என்று கமல்ஹாசன் நேரடியாக விமர்சித்தார்.

இரண்டு நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னைப் புறப்பட்டார். முன்னதாகக் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “குரங்கணி மலை நிகழ்வை கோரமான பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர்காலத்தின் ஒரு பகுதி தீக்கரையாகிவிட்டது.  வரும் காலத்தில் வனத்துக்குள் செல்வதற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நான் நேரில் சென்று அவர்களுக்கு இடையூறாக இருக்க விரும்பவில்லை.

அவர்களுக்குத் தேவை முதலுதவி சிகிச்சைதான். பெற்றோர்கள் உணர்ச்சிவசப்பட்டு, மருத்துவர்களின் பணிகளைத் தடுக்க வேண்டாம்.

அரசின் முதலுதவி செயல்பாடு சரியாகத்தான் உள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் சரியாகச் செயல்பட்டு வருகின்றனர்.

மீனவர்களைக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை அறிக்கை சொல்லியிருப்பதை சிறிய செய்தியாகப் போடாமல், ஒகிபோல நடந்து முடிந்ததுக்குப் பிறகு பெரிதாக்காமல் இப்போதிலிருந்தே பெரிதுபடுத்தலாம்.

வனப்பகுதிகளில் மனிதர்களுக்குப் பல பொறுப்புகள் உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதை தீர்க்க முடியாத பிரச்னையாக ஆக்கியிருக்கத் தேவையில்லை.

விவசாயிகளுக்கு மட்டுமல்ல, தண்ணீர் சேமிப்பை அனைத்து மக்களும் கற்க வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக வரும் காலத்தில் நிச்சயம் கேரள முதல்வருடன் பேசுவேன்.

சுற்றுப்பயணத்தில் மக்களின் வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். ஜி.எஸ்.டி-யில் சில நல்ல விஷயங்களும் உள்ளன. 7 வருடங்களுக்கு முன்பாகவே சினிமாத் துறையில் ஜி.எஸ்.டி போன்றதொரு விஷயம் வரப்போகிறது என நான் கூறி வந்தேன்” என்றார்