அமெரிக்காவின் தேவைக்கு அமையவே ரணில் விக்ரமசிங்கவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியும், முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரியுமான தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
எலிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் இன்று பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இளவரசர் ஒருவரைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆலோசனை வழங்குகின்றார்.
அமெரிக்கா உலகம் முழுவதிலும் நாடுகளை பிளவுபடுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது, அதன் ஓர் கட்டமாக இலங்கையிலும் அந்த முயற்சியை மேற்கொள்கின்றது.
நாட்டை பிளவடையச் செய்யும் அமெரிக்கத் தூதுவரின் முயற்சியில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் சிக்கியுள்ளனர்.
பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டாம் என அமெரிக்கத் தூதுவர், ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்த பணிப்புரைக்கு அமையவே பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்படவில்லை.
இந்த பணிப்புரையை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ஆட்சியாளர்கள் பின்வாங்கியுள்ளனர் என தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.