வலைத்தளங்கள் ஊடாக மெல்ல ஆரம்பித்து ஊரடங்கில் அடக்கப்பட்ட கலவரம்!
பாதுகாப்புத் தரப்பினரின் 24 மணிநேர கண்காணிப்பில் அவ்வப்போது தளர்த்தப்பட்டு பிறப்பிக்கப்படும் ஊரடங்குச்சட்டத்துக்கு மத்தியில் பரிதாபகரமாக உள்ளது.
இந் நிலைமைக்கு மேலதிகமாக முழு நாட்டிலும் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவு அமுலுக்கு கொண்டுவரப்பட்டு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் மேலாக, கண்டி மாவட்டத்தின் பல கோடி ரூபா பெறுமதியான வீடுகள், வர்த்தக நிைலயங்கள் , 25 வரையிலான பள்ளிவாசல்கள் ( சிறு சேதங்களுக்கு உள்ளானவையும் உள்ளடக்கம்) பலகோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் விலைமதிப்பற்ற இரு மனித உயிர்களும் வன்முறைகளால் காவுகொள்ளப்பட்டுள்ளன.
இவற்றை விட இதுவரை தற்போது கண்டியில் வாழும் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கண்டிராத, அனுபவித்திராத, அசாதாரண, அச்சத்துடன் கூடிய நிலைமைக்கு முகங்கொடுத்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்குமளவுக்கு நிலைமைகள் மோசமாகியமை கவலைக்குரியது.
உண்மையில் இத்தகைய வன்மத்துக்கு, கொடுமைக்கு காரணம் தான் என்ன?
பொலிஸ் உளவுத்துறையினரின் அறிக்கைகளின் படியும் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் கட்டுப்பாட்டில் அதன் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் படியும் இவ் வன்முறைகள் மிகவும் திட்டமிடப்பட்டு, சதித்திட்டம் தீட்டப்பட்டு, இனவாதிகளால் வழிநடத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டவை.
சிங்கள சாரதி ஒருவரின் கொலையை மையப்படுத்தி வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் போதும், இதுவரையிலான விசாரணைகளில் அச் சம்பவமானது இனவாதிகளால் தமது வன்முறை நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர, அச் சம்பவத்துக்கும் வன்முறைகளுக்கும் தொடர்பில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந் நிலையில் கண்டி மாவட்டத்தில் பரவிய வன்முறைகள் தொடர்பிலும் அதற்கு காரணமாக வன்முறையாளர்களால் பயன்படுத்தப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பிலும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும் நாம் ஆராய்ந்தோம்.
2018.02.22 அன்று நடந்தது என்ன?
முஸ்லிம் இளஞர்கள் பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் சிங்கள இன சாரதி ஒருவரால் செலுத்தப்பட்ட லொறியொன்றும் பாதையில் வேகமாக போட்டி போட்டுக்கொண்டு ஒன்றையொன்று முந்த முயற்சித்து பயணித்துள்ளன.
இதன்போது ஒரு கட்டத்தில் லொறி முச்சக்கர வண்டியை உரசிச் சென்ற போது முச்சக்கர வண்டி பக்கக் கண்ணாடியொன்று சேதமடைகின்றது.
இது தொடர்பில் சம்பவத்தின் போதே லொறி சாரதியினால் முச்சக்கர வண்டியில் இருந்தோரிடம் நஷ்ட ஈடாக குறிப்பிட்ட தொகை பணம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த லொறி சாரதி (பெரும்பான்மை இளைஞன்) அம்பல பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கையில், அவரை பின்தொடர்ந்து விரட்டி குறித்த முஸ்லிம் இளஞர்கள் குழு சென்றுள்ளது.
அவர்கள் கண்டி–- திகன பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் அருகில் வைத்து லொறியை மடக்கி குறித்த சாரதியை லொறியில் இருந்து இறக்கி அவரை தாறுமாறாக தாக்கியுள்ளனர். தலைக்கவசங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம் அருகிலிருந்த கதிரைகள், பியர் டின்களால் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் குறித்த சாரதி படுகாயமடைந்துள்ளார்.படுகாயமடைந்த சாரதி கண்டி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார், சாரதியைத் தாக்கியதாக கூறப்படும் 4 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இதனிடையே கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.குமாரசிங்க என்னும் 41 வயதான சாரதி கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த இைளஞன் உயிரிழந்தமை தொடர்பிலான தகவல் பிரதேசமெங்கும் அதற்கான காரணத்துடன் பரவவே, பெரும்பான்மை இனக் கும்பல்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தத் தொடங்கின.
சமூக வலைத்தளங்களால்தூண்டப்பட்ட வன்முறை
இந் நிலையில் சிங்கள இளைஞனை முஸ்லிம்கள் அடித்து கொன்றதாக கூறி அதற்கு எதிராக அணி திரள திட்டமிட்ட இனவாதிகள் சிலர் சமூக வலைத்தளங்களூடாக தயார்படுத்தல்களை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பிலான தகவல்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்த சிங்கள இளஞருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எனக் கூறி வெளியிடங்களிலிருந்து சூட்சுமமாக வன்முறையாளர்கள் கண்டிக்குள் வரவழைக்கப்பட்டு அங்கு பல இடங்களில் முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தற்போது கைதாகியுள்ள பிரதான சந்தேக நபரான ‘‘மஹசொஹொன் பலகாய”என்னும் அமைப்பின் தலைவன் அமித் வீரசிங்க, ”சிங்கள தேசிய சக்தி” என்னும் அமைப்பின் தலைவனும் அமித்தின் சகாவுமான சுரேந்ர சுரவீர ஆகியோர் முன்னின்று செயற்பட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு திரட்டியுள்ளது.
2018.03.03, 2018.03.04 வன்முறைகள் ஆரம்பம்
இந் நிலையில் 3 ஆம் திகதி சனிக் கிழமை முதல் திகன நகரில் பதற்றமான சூழலொன்று நிலவிய நிலையில், 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அச்சூழல் வன்முறையாக வெடித்தது.
இவ்வாறு வன்முறை பரவும் அபாயம் இருப்பதாக கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏக்கநாயக்க உள்ளிட்ட உயர்மட்ட தரப்புக்கு முஸ்லிம்கள் கொண்டு சென்ற போதும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அல்லது, அவர்களால் இயலாமல் போனது என்பது கவலைக்குரிய விடயமே.
அதன் பிரதிபலனாக மத்திய கண்டி எனக் கூறப்படும் திகன–- மொரகஹமுல்ல சந்தியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான பலசரக்கு கடைக்கு 4 ஆம் திகதி இரவு பெரும்பான்மை இனக் கும்பலால் தீ வைக்கப்பட்டது. இதனால் குறித்த கடை முற்றாக சேதமடைந்துள்ளது.
இந் நிலையில் இவ் விடயம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார் முஸ்லிம்களுக்கு சொந்தமான அவ் வர்த்தக நிலையம் மீது தீ வைத்த பெரும்பான்மை இனக் கும்பலைச் சேர்ந்த 24 பேரை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.
2018.03.05
அன்றைய தினம் தாக்குதல் காரணமாக உயிரிழந்த பெரும்பான்மை இன இளைஞரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற நிலையில், அதனூடாக வன்முறைகளுக்கு தூபமிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த 24 இளைஞர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி அன்றைய தினம் திகன நகரில் பெரும் பான்மை இனத்தவர்கள் ஒன்றுகூடலாயினர்.
இதனிடையே உயிரிழந்த பெரும்பான்மை இன இளைஞரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற நிலையில், அந்த இறுதி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதனால் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க, கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏக்கநாயக்க ஆகியோரின் உத்தரவு, நேரடி மேற்பார்வைக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவின் நேரடி கட்டுப்பாட்டில் விசேட பாதுகாப்பு நிலைமைகள் அமுல் செய்யப்பட்டன.
பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க திகன நகருக்குள் பூதவுடலை ஊர்வலமாக கொண்டுவருவதை தடுத்து நீதிமன்ற உத்தரவையும் பொலிஸார் பெற்றனர்.
எவ்வாறாயினும் நீதிமன்ற உத்தரவையும் மீறி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட 50 இற்கும் அதிகமான தேரர்கள் மற்றும் பெரும்பான்மை இனத்தவர்கள் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டும் திகன நகருக்குள் நுழைந்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கடை எரிப்பு சந்தேக நபர்கள் 24 பேரையும் விடுவிக்கக் கோரி அவர்கள் இந்த முற்றுகை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
தெல்தெனிய பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டும் திகன நகரில் வன்முறையை தூண்டும் வண்ணமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடந்துகொண்ட நிலையில் அவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல், நீர்த்தாரை பிரயோகம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.
முஸ்லிம்களின் சொத்துக்களை இலக்கு வைத்த திட்டமிட்ட தாக்குதல்
இந் நிலையில் நகரின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே, திகன நகரிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான பல வர்த்தக நிலையங்கள் மீதும் திகன ஜும் ஆப்பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அதன் வளாகத்திலும் தீ வைக்கப்பட்டுள்ளது.
திகனவில் மட்டுமன்றி அன்றைய தினமே அவ் வன்முறைகள் தெல்தெனிய, அம்பதென்ன உள்ளிட்ட பகுதிகளை நோக்கியும் பரவலடைந்துள்ளன.
இந் நிலையில் இவ் வன்முறைகள் திகனவுக்கு அப்பாலும் பரவும் அபாயம் காணப்பட்ட நிலையில், மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைவாக உடனடியாக ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கிலும் தொடர்ந்த வன்முறைகள்
எனினும் பொலிஸ் ஊரடங்கால் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனது. ஊரடங்கு இருந்த போதே, 5 ஆம் திகதி இரவு வன்முறைகள் தலைவிரித்தாட ஆரம்பித்தன. திகன, அளுத்வத்த, ஹிஜ்ராபுர பகுதி முஸ்லிம்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு தமது உறவினர்கள் வீடுகளுக்குள் தஞ்சமடையும் நிலைக்கு நிலைமை மோசமானது.
அதனுடன் வன்முறை ஓயவில்லை
கொங்கல்ல, அம்பத்தென்ன, கும்புக்கந்தர, தென்னகும்பர, உள்ளிட்ட தெல்தெனிய, பல்லேகலை பொலிஸ் பிரிவுகளிலுள்ள அனைத்து முஸ்லிம் கிராமங்களும் வன்முறையாளர்களின் இலக்குக்குள்ளாகின.
2018.03.06 அவசரகால நிலை பிரகடனம்
பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் என்பன பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டும் பொலிஸ் ஊரடங்ைகத் தாண்டியும் வன்முறைகள் தீவிரமான நிலையில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் உடன் கூட்டப்பட்டு நிலைமை ஆராயப்பட்டது.
அதன் பிரதிபலனாக ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவை அமுலுக்கு கொண் டுவருவதாக அறிவித்து வர்த்தமானி வெளியிட்டார். இதனூடாக நாட்டில் அவசரகால நிலைமை அன்ைறய தினம் பிற்பகல் 2.45 முதல் பிரகடனமானது.
அதன்படி உயிரிழப்புக்களை ஏற்படுத்தல், காயங்களை ஏற்படுத்தல், சொத்து சேதங்களை ஏற்படுத்தல், பாலியல் ரீதியிலான வன்மத்தில் ஈடுபடல், கொள்ளையடித்தல், இனங்களுக்கிடையே முறுகல்நிலையை தோற்றுவித்தல், இனமுறுகலை தூண்டும் வண்ணம் கட்டுரைகள், எழுத்துக்களை சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் பதிவு செய்தல், அவற்றை பகிர்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் அவை தொடர்பில் அவசரகாலச் சட்ட விதிகளின் பிரகாரம் 20 வருட சிறைத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ பெற்றுக்கொடுக்க முடியுெமன பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
அவசரகாலச் சட்டமும் அதன் வரலாறும்
இலங்கை வரலாற்றில் சுதந்திரத்துக்கு பின்னர் 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி 10561 இலக்க வர்த்தமானியூடாக முதன்முதலாக அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
அக்காலப்பகுதியில் இடம்பெற்ற ஹர்த்தால் நடவடிக்கையை மையப்படுத்தி 29 நாட்களுக்கு அந்த அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்ததுடன் 1953 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அச்சட்டம் நீக்கப்பட்டது.
இறுதியாக 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக் ஷ்மன் கதிர்காமரின் படுகொலையையடுத்து, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஊடாக அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில், அச்சட்டமானது பின்னர் யுத்தம் முடிந்து இரு வருடங்கள் கழிந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை நீக்கப்பட்டிருந்தது.1953, 2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மட்டும் அவ்வப்போது ஏற்பட்ட அவசியத்துக்கு அமைவாக சுமார் 26 தடவைகள் அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
2011 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் நாட்டில் அச் சட்டமானது 6 வருடங்களின் பின்னர் தற்போதே அமுல் செய்யப்படுகின்றது.
அவசரகால நிலைமையிலும் தொடர்ந்த வன்முறை
அவசரகால நிலை பிரகடனம் செய்த போதும் கண்டியில் நிலைமை மாறவில்லை. 6 ஆம் திகதி கொங்கல்ல பகுதியில் அப்துல் பாஸித் என்னும் 26 வயது முஸ்லிம் இைளஞனின் சடலம் எரிந்த அவரது வீட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்டது.
இந் நிலையில் அது தொடர்பிலான சந்தேக நபர்களைக் கைது செய்ய தற்போது தனியான குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குழு அங்கு விசாரணைகளை செய்கிறது.
2018.03.06 இரவு மற்றும் 2018.03.07 ஆம் நாள்
இந்த திகதிகளுக்கும் உட்பட்ட 36 மணி நேரத்திலேயே கலவரம் தீவிரமானது எனலாம். மெனிக்ஹின்ன, ெதன்னகும்பர, ஆகிய பகுதிகளில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அஹதியா அறநெறிப் பாடசாலை ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் முஸ்லிம்களின் வாகனங்கள் பலவும் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
தென்னகும்பர பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் நாம் அப்பகுதிக்கு சென்றிருந்த போது, பலர் கவலைகளை வெளிப்படுத்தினர்.
தென்னகும்பர அஹதியா பாடசாலையின் செயலாளர் கே.எம்.ரிஸ்வான் கூறுகையில்,
இங்கு 60 வரையிலான முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கிறோம். அஹதியா பாடசாலையில் 150 மாணவர்கள் வரை கற்கின்றனர். சிங்களவர்களுடன் இதுவரை எந்த சின்ன சச்சரவு கூட வந்ததில்லை. இப்போது தான் இத்தகைய நிலைமையை உணர்கின்றோம். இதன்பின்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என்றார்.
அப்பகுதியில் சேதமாக்கப்பட்ட வீடொன்றின் உரிமையாளர் மொஹம்மட் கலீல் இவ்வாறு கூறினார்.
மாலை 7 மணியிருக்கும். 600 பேருக்கும் அதிகமானோர் ஊரடங்கு உத்தரவு இருந்த போதும் கூட்டமாக வந்தனர். அப்போது நாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஒரு மூலையில் முடங்கிக்கிடந்தோம் என்றார்.
தென்னகும்பரவின் நிலைமை இவ்வாறு இருக்க, ஒரு உயிர் காவுகொள்ளப்பட்ட கெங்கல்ல பகுதியில் வைத்து அதிர்ச்சிகரமான சில தகவல்கள் எமக்குக் கிடைத்தன.
உயிரிழந்த இளஞனின் வீட்டுக்கருகில் வர்த்தக நிலையத்தை வன்முறையாளர்கள் பற்றவைத்த போது, அங்கு காவல் கடமையில் பொலிஸார் இருந்ததாகவும் எனினும் அவற்றை அவர்கள் தடுக்கவில்லையெனவும் வன்முறையாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் செயற்பட்டதாகவும் அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
இதனைவிட உயிரிழந்த இளைஞன் பாஸித்தின் சகோதரர் ஒருவர் எம்மிடம் பேசும் போது, பாஸித்தின் மற்றொரு சகோதரர் வன்முறையில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொன்டு செல்லப்பட்ட போது, தாம் பொலிஸாருக்கு எரியும் வீட்டினுள் பாஸித் இருப்பதாக எவ்வளவோ கூறியும் அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லையென குற்றம் சுமத்தினார்.
இதே போன்றே மற்றொரு வர்த்தக நிலைய உரிமையாளரான மொஹம்மட் பெரோஸ் என்பவரை நாம் சந்தித்த போது, அவரது கடை கொள்ளையிடப்பட்ட பின்னரேயே தீக்கிரையாக்கப்பட்டதாக சி.சி.ரி.வி. ஆதாரங்களுடன் கூறினார்.
இவ்வாறான சூழலில் இந்த வன்முறைகள் வெறும் திகனயில் மட்டுமல்ல, ரங்கல, கட்டுகஸ்தோட்டை, மெனிக்ஹின்ன, பள்ளேகல, தெல்தெனிய, பூஜாபிட்டிய, வத்தேகம மற்றும் கண்டி, அலவத்துகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் பெருவாரியான வன்முறைகள் பதிவாகின.
சமூக வலைத்தளங்கள் முடக்கம்
இந் நிலையில் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் தொடர்ந்த நிலையில் பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமைய பேஸ்புக், வட்ஸ் அப், வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. காரணம், அந்த சமூக வலைத்தளங்கள் ஊடாகவே வன்முறைத் திட்டங்கள் தொடர்பில் அனைவரும் ஒன்று சேர்ந்தமை தொடர்பில் விசாரணையாளர்கள் அடையாளம் கண்ட நிலையிலேயே அவை முடக்கப்பட்டன.
அதன் பிரதிபலனாக வன்முறையை 7 ஆம் திகதி இரவுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
சூத்திரதாரிகள் பலர் கைது
இந் நிலையில் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த வாரத்தில் மூன்று நாட்களாக இடம்பெற்ற இனரீதியிலான வன்முறைகளுக்கு சதித்திட்டம் தீட்டி, இனவாதத்தை தூண்டி வழிநடத்திய பிரதான சந்தேக நபரான, ”மகசொஹொன் பலகாய” என்னும் அமைப்பின் தலைவனாக கருதப்படும் அமித் வீரசிங்க, அவனது சகா சுரேந்ர சுரவீர உள்ளிட்ட 10 பேரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
கொழும்பிலிருந்து நேற்று முன்தினம் காலை சென்ற பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தலைமையிலான, அதன் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த உள்ளிட்ட குழுவினர் இவர்களை பூஜாபிட்டிய மற்றும் திகன பகுதிகளில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரில் இருவர் மட்டுமே அப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனையோர் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் 10 ேபரும் கைது செய்யப்படும் போதும் வன்முறைகளுக்கு சதித்திட்டம் தீட்டிய வண்ணம் அவர்கள் இருந்துள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிபிட்டார்.
இந் நிலையில் கண்டி வன்முறைகள் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை, வன்முறைகளை வழிநடத்தியமை, இனவாதத்தை தூண்டியமை, அது தொடர்பில் உபதேசம் செய்தமை, சமூக வலைத்தளங்களூடாக வன்முறைகளுக்கு தூபமிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த 10 பேரையும் கைது செய்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், நேற்று முன்தினம் இரவு அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்தனர்.
இவ்வாறு கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட 10 பேரும், 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசரகால சட்டத்தின் விடயதானங்களுக்கு அமைவாக பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குள்ள அதிகாரத்தின் கீழ், 14 நாட்கள் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்குட் படுத்தப்படவுள்ளனர்.
இந்த விசாரணைகளூடாக இந்த வன்முறைகளின் பின்னணியிலிருந்த ஏனையோரையும் கைது செய்ய முடியும் என நம்பும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், வன்முறைகளின் பின்னணியில் அரசியல் தொடர்புகள் இருக்கிறனவா எனவும் ஆராய்கின்றனர்.
எது எப்படியோ, நேற்று கண்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இனவாதம் தலைதூக்காவண்ணம் பாதுகாப்பு போடப்பட்டே முஸ்லிம்களின் புனித ஜும் ஆ கடமைகள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு நாளும் இப்படி பாதுகாப்புக்கு மத்தியில் தமது அன்றாட நடவடிக்கைகளை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடக் கூடாது.
எனவே உடனடியாக நல்லிணக்கம், சகவாழ்வு தொடர் பிலான கட்ட மைப்புக்கள் சீர் செய்யப்பட்டு, அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இலங்கையர்கள் என்னும் கொடியின் கீழ் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
எம்.எப்.எம்.பஸீர்