சென்னை : ”அஸ்வினியை நன்றாக படிக்க வைத்து, திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். ஆனால், என்னை காதலித்து ஏமாற்றியதால், எனக்கு கிடைக்காதவள், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைத்து, கொலை செய்தேன்,” என்று, கல்லுாரி மாணவி, அஸ்வினி கொலை வழக்கில் கைதான அழகேசன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை, மதுரவாயலை அடுத்த, ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர், சங்கரி; வீட்டு வேலை செய்கிறார்.கணவர் மோகன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
இவருக்கு, மகன், மகள் உள்ளனர். மகள், அஸ்வினி, 19; கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அஸ்வினி வீட்டிற்கு அருகே வசித்தவன், அழகேசன், 25. இவனும், அஸ்வினியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்தனர்.
சில மாதங்களுக்கு முன், அழகேசனை விட்டு அஸ்வினி விலகினார். அஸ்வினியை பின் தொடர்ந்த அழகேசன், காதலிக்கும்படி வற்புறுத்தினான். இதையடுத்து, மதுரவாயல் போலீசில், அழகேசன் மீது, அஸ்வினி புகார் அளித்தார்.
அதன்பின், ‘அஸ்வினி யை தொந்தரவு செய்யக்கூடாது‘ என, எழுதி வாங்கி, அழகேசனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.இந்நிலையில், நேற்று முன்தினம், அஸ்வினி படித்து வந்த கல்லுாரிக்கு சென்ற அழகேசன், தன்னை காதலிக்கும்படி, அஸ்வினியை வலியுறுத்தினான்.
அவர் மறுக்கவே, அழகேசன் தன் மீது பெட்ரோலை ஊற்றி, மறைத்து வைத்திருந்த கத்தியால், அஸ்வினி கழுத்தில் குத்தினான்.
இதில், சம்பவ இடத்திலேயே அஸ்வினி உயிரிழந்தார். அழகேசன், தன்னை தானே எரித்துக் கொள்ள முயன்ற போது, பொதுமக்கள் அவனை பிடித்து, நைய புடைத்தனர்.கே.கே.நகர் போலீசார், அஸ்வினியின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
பொதுமக்கள் தாக்கியதில் படுகாய மடைந்த அழகேசனையும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை முடிந்து, அழகேசன் நேற்று, ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டான்.
அவனை, கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, போலீசார் விசாரித்தனர்.
போலீசாரிடம், அழகேசன் அளித்த வாக்குமூலம்: நானும், அஸ்வினியும் காதலித்தோம். இரண்டு குடும்பத்துக்கும், எங்களது காதல் விவகாரம் தெரியும்.
அஸ்வினியிடம் மொபைல் போன் இல்லாததால், அவரது அம்மா மொபைல் போனில் தொடர்பு கொண்டு தான், நான் அஸ்வினியிடம் பேசுவேன்.
அவர்களது அம்மா, என்னிடம் நன்றாக பேசுவார். நான், அவரை அத்தை என, அழைப்பேன்.
அஸ்வினிக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளேன். பிளஸ் 2 தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்றும், குடும்ப சூழல் காரணமாக, அஸ்வினியால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.
இதனால், என் வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து, இரண்டு லட்சம் ரூபாய், படிப்பு செலவுக்கு கொடுத்தேன்.
அவ்வப்போது, அஸ்வினிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். கல்லுாரியில்சேர்ந்த பின், அவளிடம் மாற்றம் ஏற்பட்டது.
என்னை விட்டு விலகத் துவங்கினாள். இதையடுத்து, அவள் வீட்டிற்கு சென்று, தாலி கட்டினேன். முதலில் மறுத்தாலும், அதன்பின் ஏற்றுக் கொண்டாள்.
அவர்களது உறவினர்கள், அஸ்வினியிடம் பேசி, அவள் மனதை மாற்றினர். இதனால், என் மீது அவள், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தாள்.
அப்போது, இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நான் படிக்காதவன் என்றும் கூறி, ‘இவனை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்’ என, காவல் நிலையத்தில்அஸ்வினி கூறினாள்.
அங்கு, ‘அஸ்வினியை, இனி தொந்தரவு செய்யக் கூடாது’ என, போலீசார் எச்சரித்தனர். அதன் பின், அஸ்வினியை மறக்க நினைத்தேன். ஆனால், அவள் நினைவுகளும், அவள் என்னை ஏமாற்றியதும், என் நினைவுக்கு வந்தபடி இருந்தன.
எனக்கு கிடைக்காதவள், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என திட்டமிட்டு, கல்லுாரிக்கு சென்றேன். கடைசி நிமிடம் வரை, அவளிடம் கெஞ்சினேன்.
அப்போதும், அஸ்வினி திமிராக நடந்து கொண்டதால், மறைத்து வைத்திருந்த கத்தியால், அவளை குத்தி கொலை செய்து, நானும் தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அழகேசன் வாக்குமூலம் அளித்து உள்ளான். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அழகேசன் சிறையில் அடைக்கப்பட்டான்.
மதுரவாயல் போலீஸ் விளக்கம்
அஸ்வினி கொலை வழக்கில், அழகேசன் குற்றவாளி என்றாலும், மதுரவாயல் போலீசார் மீதும், அஸ்வினியின் உறவினர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
இது குறித்து, மதுரவாயல் போலீசார் அளித்த விளக்கம்: அஸ்வினியை, வாலிபர் ஒருவர் தொந்தரவு செய்கிறார்; அவரை எச்சரிக்க வேண்டும் என, அவரது தாய், சங்கரி புகார் அளித்தார். புகாரை விசாரித்த போது, இருவரும் காதலித்தது தெரியவந்தது.
சில காலங்களாக, அழகேசனை விட்டு அஸ்வினி பிரிந்ததால், தொந்தரவு செய்துள்ளான். அப்போதே அவனை கைது செய்வதாகக் கூறினோம்.
ஆனால், அஸ்வினியின் தாய், ‘எச்சரித்து அனுப்பினால் போதும்; அவனை கைது செய்ய வேண்டாம்’ என, கேட்டுக் கொண்டார். அதனால் தான், அவனிடம் எழுதி வாங்கி, எச்சரித்து அனுப்பினோம்.இவ்வாறு விளக்கம் அளித்தனர்.