திருமணம் செய்துகொள்ளும்போது அது கவனிக்கத்தக்க வகையில் நடைபெற வேண்டும் என்ற விருப்பம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.
சென்னையில் இந்த மகளிர் தினத்தன்று, எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி, எந்த முன்னறிவிப்பும் இன்றி, காலையில் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு மதியம் எளிய முறையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் பல கவனிக்கத்தகுந்த அம்சங்கள் உள்ளன.
சாதி மறுப்புத் திருமணமாகவும், சடங்கு மறுப்புத் திருமணமாகவும் நடைபெற்ற இந்தத் திருமணத்தின் மற்றுமொரு சிறப்பு மணமக்கள் இருவருமே மூன்றாம் பாலினத்தவர்கள்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் தொடங்கிய நட்பு காதலாக மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்யாணிபுரம் எனும் கிராமத்தில் கடந்த 1988ஆம் ஆண்டில் தனது குடும்பத்தின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் பிரீத்திஷா.
“ஆணாகப் பிறந்த நான் எனக்குள் இருந்த பெண்மையை உணரத் தொடங்கியபோது எனக்கு வயது 14,” என்று பிபிசி தமிழிடம் கூறினார் திருநம்பி பிரேம் குமரன் உடன் தனது மண வாழ்க்கையைத் தொடங்கியுள்ள பிரீத்திஷா.
பள்ளியில் படிக்கும்போது மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பிரீத்திஷா தற்போது தொழில் முறையாகவே ஒரு மேடை நாடகக் கலைஞராகவும் நடிப்புப் பயிற்றுநராகவும் உள்ளார்.
“2004 அல்லது 2005 இருக்கும். புதுச்சேரியில் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தபோது சுதா எனும் திருநங்கை ஒருவரை சந்தித்தேன். அவர் மூலம் கடலூரைச் சேர்ந்த பூங்கோடி எனும் திருநங்கையின் அறிமுகம் கிடைத்தது.
பூங்கொடியம்மாள் மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த சில திருநங்கைகள் மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர்,” என்று தாம் வீட்டிலிருந்து வெளியேறிய அனுபவத்தைக் கூறுகிறார் பிரீத்திஷா.
அங்கு திருநங்கைகள் பலருக்கும் இருக்கும் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்பு பாலியல் தொழில் அல்லது பிச்சை வாங்குவதுதான்.
அவை இரண்டிலுமே விருப்பம் இல்லாத பிரீத்திஷா தனது தோழி ஒருவரின் ஆலோசனையின்படி புறநகர் ரயில்களில் கீ செயின் மற்றும் செல்பேசி கவர்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறார்.
“நாங்கள் எல்லோரும் பிச்சை எடுக்கும்போது நீ மட்டும் இவற்றை விற்பனை செய்தால் மற்றவர்கள் எங்களையும் கேள்வி கேட்க தொடங்கிவிடுவார்கள் என்று திருநங்கைகளே எங்களை கடுமையாக எதிர்த்தார்கள்.
புறநகர் ரயில்களில் எந்தப் பொருளையும் விற்க தடை இருந்தாலும் ரயில் நிலைய அதிகாரிகளும், ரயில்வே காவல் துறையினரும் எங்களை அனுமதித்ததால் நாளொன்றுக்கு 300-400 ரூபாய் எங்களால் சம்பாதிக்க முடிந்தது,” என்று கூறுகிறார் பிரித்திஷா.
அதில் கிடைத்த வருமானம் மற்றும் தன்னிடம் இருந்த ரூபாய் 23 ஆயிரம் சேமிப்பு ஆகியவற்றின்மூலம் பிரீத்திஷா பால்மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது அவருக்கு வயது 17.
அதன் பின்னர் ஒரு திருநங்கைகள் கலைக்குழுவில் இணைந்த அவர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் மூலம் பொருளீட்டி வந்த பிரீத்திஷா 3-4 ஆண்டுகளுக்குப், பிறகு சென்னை திரும்பினார்.
“சென்னை திரும்பியதும் மேடை நாடகங்களில் நடித்தபோது, அதே துறையில் உள்ள மணிக்குட்டி மற்றும் ஜெயராமன் ஆகிய இருவருடன் ஏற்பட்ட தொடர்பு என் நடிப்புத் திறனை மெருகேற்ற உதவியது. அவர்கள் உதவியுடன் தற்போது நான் முழுநேரமும் நடிப்பு மற்றும் நடிப்புப் பயிற்சி வழங்கி வருகிறேன்,” என்கிறார் அவர்.
ஈரோட்டில் உள்ள ஒரு குடும்பத்தில் 1991இல் பெண்ணாகப் பிறந்த பிரேம் குமரன் உடன் 2012இல் ஃபேஸ்புக் மூலம் பிரீதிஷாவுக்கு நட்பு கிடைத்தது. அப்போது தான் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஆணாகவே உணர்வது குறித்து தெரிவித்தார் பிரேம்.
பால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய 2012இல் சென்னை வந்த பிரேம், பிரீத்திஷா மற்றும் அவரது நண்பர்களுடன் தங்கியிருந்தார். அதுதான் அவர்களது முதல் சந்திப்பு.
ஒரு விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால் கல்லூரிப்படிப்பை முதலாம் ஆண்டிலேயே நிறுத்திய பிரேம் புதுச்சேரியில், தாய் ஸ்தானத்தில் வைத்து மதிக்கும் தனது நலம் விரும்பி ஒருவரது உதவியுடன் 2016ஆண்டில் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் .
நெருங்கிய நண்பர்களாக இருந்த பிரேம் மற்றும் பிரீத்திஷா ஆகியோர் தங்களுக்கு காதல் உண்டாகும் நபர்கள் பற்றியும் தங்களது பாலினத்தைக் காரணம்காட்டி புறக்கணிக்கப்படுவது பற்றியும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.
அப்படித்தான் கடந்த ஆண்டு நடந்த ஒரு அலைபேசி உரையாடலின்போது பிரேம் எதிர்பார்க்காத அந்தக் கேள்வியைக் கேட்டார் பிரீத்திஷா. “ஒரே காரணத்தால் நாம் விரும்பும் நபர்களால் புறக்கணிக்கப்படும் நாம் ஏன் சேர்ந்து வாழக்கூடாது?” என்பதுதான் அது.
பிரேம் உடனே சம்மதம் தெரிவிக்க பல ஆண்டு நட்பு காதலாக மலர்ந்தது. குடும்பத்தினரிடம் தெரிவித்தால் சாதி உள்ளிட்ட காரணங்களால் கடுமையான எதிர்ப்பு கிளம்பும் என்பதால் தங்கள் நலம் விரும்பியான வழக்கறிஞர் சுஜாதா மூலம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தை இருவரும் அணுகினர்.
மகளிர் தினமான மார்ச் 8 அன்று அவர்கள் இருவருக்கும் பெரியார் அய். ஏ. எஸ் அகாடமி பொறுப்பாளர் அமுதரசன் தலைமையில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் முத்தையன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் செந்தில் குமாரி உள்ளிட்டோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
“பொருளாதார சிக்கல் உள்ளது. காதுபட கேலி செய்பவர்களும் உண்டு. அண்டை வீட்டார் நாங்கள் வெளியேற வேண்டும் என விரும்புகிறார்கள். வீட்டு உரிமையாளர் எங்களைப் புரிந்துகொண்டு ஆதரவளிப்பதால் நாங்கள் அங்கேயே தங்கியுள்ளோம்,” என்று கூறுகிறார் பிரீத்திஷா.
பெரியார் பிறந்த அதே ஊரில் பிறந்து பெரியார் அறிமுகம் செய்துவைத்த சுயமரியாதைத் திருமணத்தை செய்துகொண்ட பிரேம், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டுள்ளதால் தங்கள் உறவினர்கள் தனது குடும்பத்தினருக்கு சிக்கல் கொடுக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிரேம் அதிக பணிச்சுமையால் சமீபத்தில் அதிலிருந்து விலகி வேறு வேலை தேடி வருகிறார்.
பொருளாதாரா சிக்கல்களையும் மீறி தொலைநிலைக் கல்வி மூலமேனும் பிரேம் பாதியில் விட்ட படிப்பை முடிக்க வைப்பேன் என்று அவரது இணையரான பிரீத்திஷா பிபிசி தமிழிடம் கூறினார்.
பிரீத்திஷாவின் குடும்பத்தினர் அவரது பாலினத் தேர்வை ஏற்றுக்கொண்டாலும் இன்னும் அவரது சகோதரியைத் தவிர வேறு யாருக்கும் அவர்களுக்குத் திருமணம் முடிந்த செய்தி தெரியாது.
பிரீத்திஷா தன் பள்ளிப்படிப்பை எட்டாம் வகுப்புடன் இடை நிறுத்தினாலும் பின்னர் 10, 12 ஆகிய வகுப்புகளை தனித்த தேர்வராகப் படித்து முடித்தார்.
தங்கள் கடந்த கால அடையாளங்களை அவர்கள் இருவரும் நினைவுகூர விரும்பாததால், அவர்கள் பால் மாறுவதற்கு முந்தைய பெயர்கள் வெளியிடப்படவில்லை.