மைத்திரிக்காக காத்திருக்கும் அவசரகால சட்டம்!

ஜனாதிபதி நாடு திரும்பும் வரையில் அவசரகால சட்டம் நீக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ம் திகதி முதல் 7 தினங்களுக்கு அமுலாக்கப்பட்ட அவசரகால சட்டம், நேற்றுடன் நிறைவடைந்திருக்க வேண்டும்.

ஆனால் இதனை நிறைவு செய்வதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்திடாமல் அதனை நீக்க முடியாது என்று ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ட்டின் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 17ம் திகதி நாடுதிரும்பியதன் பின்னரே, அவசரகால சட்டத்தை நீக்குவதா? நீடிப்பதா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கண்டியில் ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவங்களை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.