குரங்கணி மலை தீ விபத்தில் சிக்கி காதல் கணவர் உயிரிழந்தது தெரியாமலேயே அவரது மனைவி திவ்யா இன்று உயிரிழந்துள்ளார்.
இதனால் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஞாயிறன்று குரங்கணி மலை பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் சம்பவ இடத்தில் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களுள் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள்.
மதுரை மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 10 பேரில் நேற்று நிஷாவும் இன்று திவ்யாவும் மரணமடைந்து விட்டனர்.
நேற்று புது மாப்பிள்ளை விவேக் மரணமடைந்த நிலையில் இன்று அவரது மனைவி திவ்யா உயிரிழந்துள்ளார்.
விவேக் மற்றும் திவ்யா ஆகிய இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடந்திருக்கிறது.
விவேக் துபாயிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். அவரின் மனைவியான திவ்யா எம்.பில் முடித்துவிட்டு பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
திருமணம் முடிந்த உடன் துபாய் சென்று விட்ட விவேக், தனது மனைவியை அழைத்து செல்வதற்காக ஈரோடு வந்துள்ளார்.
அடுத்த மாதம் துபாய் செல்ல திட்டமிட்டிருந்த விவேக் இறுதியாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் குரங்கணி பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தார். திருமணமான 100வது நாளை கொண்டாடி விட்டு கொழுக்குமலைக்கு பயணம் சென்றவர்களுக்கு அது இறுதி பயணமாக மாறிவிட்டது.