மற்றவர்களுக்கு உதவி செய்துவிட்டு தீயில் கருகிய நிஷா!

குரங்கணி மலையில் தீ பரவியபோது, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டிவிட்டு உயிரிழந்துள்ளார் நிஷா என்ற இளம்பெண்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் தமிழ்ஒளி. இவரது மகள் நிஷா(30), ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

மராத்தான், மலையேற்றம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வ கொண்டிருந்த நிஷா, சென்னை டிரெக்கிங் கிளப்பில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் தான் மகளிர் தினத்தை முன்னிட்டு, கிளப் சார்பில் டிரெக்கிங் செல்ல இருந்த தகவலை நிஷா அறிந்து கொண்டார். அதன் பின், தனது பெயரையும் அதில் பதிவு செய்தார்.

தொடர்ந்து, மலையேற்றத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், பலர் வழி தெரியாமல் தடுமாறியுள்ளனர். அச்சமயம், நிஷா தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால், அவர் துரதிஷ்டவசமாக தீயில் சிக்கி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, நிஷாவின் உடல், அவரது ஊரான தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் நிஷாவின் உறவினர்கள் கூறுகையில், ‘வனப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான தீயினால் ஒவ்வொருவரும் திசை தெரியாமல் ஓடியுள்ளனர். அப்போது நிஷா நினைத்திருந்தால் தப்பித்திருக்க முடியும்.

ஆனால், நிஷா மற்றவர்களை காப்பாற்ற நினைத்து அவர்களுக்கு உதவியுள்ளார். பின்னர், அவர் தப்பிக்க நினைக்கும் போது நெருப்பு நிஷாவை விட்டுவைக்கவில்லை’ என தெரிவித்துள்ளனர்.