இன கலவரம் தொடர்பில் 445 முறைப்பாடு; 280 பேர் கைது!!

– 10 பிரதான சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணை
– இன முறுகலை ஏற்படுத்தும் ஆயிரக் கணக்கான போஸ்டர்களும் மீட்பு

கடந்த வாரம் கண்டி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற இன கலவர தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் நேற்று (12) வரையில் வீடுகள், கடைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 445 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவலை தெரிவித்தார்.

445 முறைப்பாடுகளில் கண்டியில் மட்டும் 423 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, ஏனைய பிரதேசங்களில் சேதங்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வணக்கஸ்தலங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் கண்டியிலிருந்து 19 முறைப்பாடுகளும், ஏனைய பகுதிகளிலிருந்து 5 முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்கலவரங்கள் தொடர்பில் மொத்தமாக 280 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, கண்டியில் மாத்திரம் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 59 பேர் சாதாரண சட்டத்தின் கீழும், 119 பேர் அவசரகால நிலையின் கீழும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கண்டி சம்பவம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 69 பேர் சாதாரண சட்டத்தின் கீழும், 33 பேர் அவசர கால நிலையின் கீழும் கைதுசெய்யப்ட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் கைதுசெய்யப்பட்ட 280 பேரில் 185 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதுடன், 95 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கண்டி வன்முறைகளில் கைதுசெய்யப்பட்டவர்களில் 128 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதுடன், 50 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், நாட்டின் ஏனைய பகுதிகளில் கைதுசெய்யப்பட்ட 102 பேரில் 45 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 57 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 10 பிரதான சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் பயன்படுத்திய அலுவலகங்களில் இருந்து, இன முறுகலை ஏற்படுத்தும் ஆயிரக் கணக்கான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் போத்தல்கள், 4 கணனிகளும் (CPU) மீட்கப்பட்டுள்ளதாகவும் இவற்றுடன் பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஒவ்வொன்றும் மிகவும் கவனமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி பிரதான சந்தேகநபர் உள்ளிட்டவர்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு வந்த அழைப்புக்கள், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அழைப்புக்கள் பற்றி விசேட அனுபவம் கொண்ட அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் கடந்தகாலங்களில் இந்த அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் உள்ளிட்ட சகலரின் விபரங்களையும் பெற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கலவரத்தில் 24 மத ஸ்தலங்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வாகன சேதம் தொடர்பில கண்டியில் மட்டும் 60 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, ஏனைய பகுதிகளிலிருந்து 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது தெரிவித்தார்.