விளைபொருள்களை சாலையில் காயவைக்கும் அவலம்….

தமிழகக் கிராமங்களின் அழகிய அடையாளமாகவே திகழ்ந்த களம், தற்போது அழிக்கப்பட்டுவருகிறது. இதனால், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருகிறார்கள். ஆனால் அரசு அதிகாரிகளுக்கோ, இவற்றின் முக்கியத்துவம் தெரிவதில்லை.

களம்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மானம்பாடியில், 100 ஆண்டுகள் பழைமையான களம் உள்ளது. இதை அழித்துவிட்டு, வீட்டு மனைப் பட்டா வழங்கும் முயற்சிகளில் அரசு அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், போராட்டங்களில் இறங்க ஆயத்தமாகிவருகிறார்கள். கிராமங்களில் விவசாயிகள் உற்பத்திசெய்த நெல் உள்ளிட்ட தானியங்களைக் காய வைப்பதற்காக, ஊருக்கு பொதுவாக அமைக்கப்பட்ட களம் பரந்துவிரிந்து காட்சியளிக்கும். ஆனால், சமீபகாலமாக இதுபோன்ற களங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. இதன் அருமை புரியாத அரசு அதிகாரிகள், இதை வேறு சில மாற்று உபயோகத்திற்குப் பயன்படுத்துவதால், களங்கள் காணாமல்போகின்றன.

களம்

இதனால் விவசாயிகள் படும் சிரமங்கள் ஏராளம். அறுவடைசெய்த நெல்லை காயவைக்க இடம் இல்லாததால், ஈரமான நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. அங்கு, ஈரமாகக் கொண்டுசெல்லப்படும் நெல்லை திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இல்லையென்றால், அங்குள்ள ஊழியர்களுக்கு கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. இது ஒருபுறம் என்றால், சாலைகளில் விளைபொருள்களைக் கொட்டி காயவைக்கக்கூடிய அவல நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதனால், சாலையில் பயணிப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். களங்களை அழியாமல் பாதுகாப்பது அரசின் கடமை!