மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தின் காப்புரிமை Getty Images
இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. விஞ்ஞானிகளால் இது தொடர்பான சில தகவல்களை சொல்ல முடியும் என்றாலும், இந்த கேள்விக்கான பதில் பிரம்ம ரகசியமாகவே உள்ளது.
இருந்தாலும், விஞ்ஞானிகளும் இதுபோன்ற சிக்கலான புதிர் நிறைந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சிகளில் தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.
அண்மையில் மரணம் தொடர்பாக சில விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள் ஆச்சரியமான முடிவுகளை தந்துள்ளது. இந்த ஆய்வுகளில் நரம்பியல் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெர்லின் சாரிட் பல்கலைக்கழகம் மற்றும் ஓஹியோவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஜென்ஸ் ட்ரேயரின் தலைமையின் கீழ் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்காக, சில நோயாளிகளின் குடும்பத்தினரின் முன்னனுமதியை பெற்று, நோயாளிகளின் நரம்பு மண்டலத்தை விஞ்ஞானிகள் நெருக்கமாக கண்காணித்தார்கள்.
சாலை விபத்துகளில் படுமோசமாக காயமடைந்தவர்கள், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பால் (கார்டியாக் அரெஸ்ட்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினார்கள்.
மரணிக்கும் நேரத்தில் மனிதர்களின் மூளையும், விலங்கின் மூளையும் ஒன்றுபோல் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும், மூளையை ‘ஏறத்தாழ’மறுசீரமைப்பு செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மரணத்தின் இறுதி கட்டத்தில் மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதோடு, மரணத்தின் இறுதித் தருணத்தில் இருக்கும் மனிதனை எப்படி காப்பாற்றலாம் என்பதும் இந்த ஆய்வின் முக்கியமான நோக்கங்களாக இருந்தது.
இந்த ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொள்வதற்கு முன்னர், ‘மூளை மரணம்’ பற்றி நாம் அறிந்திருக்கும் செய்திகள் பெரும்பாலும் விலங்குகளின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலிருந்து தெரிந்துக் கொண்டவை என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
மரணம் பற்றி நாம் ஏற்கனவே அறிந்தவை:
- உடலின் ரத்த ஓட்டம் நின்றுபோய், மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது குறையும்.
- இந்த நிலையில், பெருமூளைச்சிரையில் ரத்த ஓட்டம் குறைவதால் (cerebrovascular ischemia), மூளையில் ரசாயன மாறுபாடுகள் ஏற்படுகின்றன. மேலும் மூளையின் ‘மின் செயல்பாடு’ (Electrical activity ) முற்றிலுமாக நின்றுபோய்விடும்.
- மூளை அமைதியடையும் நடைமுறைக்கு காரணம், ஆற்றல் தேவைக்கான பசியுடன் இருக்கும் நரம்புகள், தங்களுக்கு தேவையான ஆற்றலைப் பெற்றாலும், மரணம் நெருங்குவதால் அந்த ஆற்றல் பயன்படுவதில்லை என்று நம்பப்படுகிறது.
- அனைத்து முக்கிய அயனிகளும், மூளை செல்களிடம் இருந்து பிரிந்துவிடுகின்றன. இதனால் அடினோசின் டிரைஃபாஸ்பேட் கிடைப்பது பலவீனமாகிறது. இது ஒரு சிக்கலான கரிம வேதியியல் ஆகும். உடல் முழுவதிலும் ஆற்றலை சேமித்து வைப்பதும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதும் இதன் வேலை.
- இதற்கு பிறகு திசுக்களை மீட்டெடுப்பது சாத்தியமற்றதாகிவிடும்.
மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி
ஆனால், ஜென்ஸ் ட்ரேயர் தலைமையிலான விஞ்ஞானிகளின் குழு மனிதர்களைப் பொறுத்தவரை இந்த செயல்முறையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள விரும்பியது. அதனால் சில நோயாளிகளின் மூளைகளின் நரம்பியல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
மின்முனையக் கீற்றுகளை (Electrode strips) பயன்படுத்தி இந்த நோயாளிகளை மயக்க நிலையில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.
ஒன்பது நோயாளிகளில் எட்டு பேருடைய மூளையின் அணுக்கள், மரணத்தை தவிர்க்க முயற்சிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மூளையின் அணுக்களும், நரம்பணுக்களும் இதயத் துடிப்பு நின்ற பிறகும்கூட வேலை செய்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
மனிதர்களின் நரம்பு மண்டலத்தின் பிரதானமானது மனித மூளை. அதுமட்டுமல்ல, மனித உறுப்புகளில் சிக்கலானதும் மூளை என்பதும் நமக்கு தெரிந்ததே. உடலின் இயல்பான செயற்பாடுகளான மூச்சுவிடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொள்ளும்.
அதேபோல், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், திட்டமிடுதல் போன்ற செயற்பாடுகளையும் மனித மூளைதான் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.
உணர்வு உறுப்புகளுக்கும் செயல்படும் உறுப்புகளுக்கும் இடையே மின்வேதியல் மாற்றங்கள் மூலம் தூண்டல்களைக் கடத்தும் பணியை செய்வது நரம்பணுக்கள் (நியூரான்கள்).
இந்த மின்வேதியல் மாற்றங்கள் நரம்பணுக்களின் உள்ளும் புறமும் நடைபெறும் சோடியம் மற்றும் பொட்டாசியம் அயனிகளின் இடம்பெயர்வால் நிகழ்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மின்வேதியல் சமநிலையை பராமரிப்பது ஒரு தொடர் முயற்சியாகும்.
உடலின் அணுக்கள் மின்வேதியல் சமநிலையை பராமரிக்க ரத்த ஓட்டத்தைப் பயன்படுத்துகின்றன, மேலும் இதிலிருந்தே ஆக்ஸிஜன் மற்றும் ரசாயன ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உடல் இறக்கும் போது, மூளையின் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும். அந்த சமயத்தில் செயலிழந்த நரம்புகள் தனது ஆற்றலை தக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன.
இது மெதுவாக பரவுவதற்கு பதில் மூளையில் ஒரே சமயத்தில் நடைபெறுவதால், இதை ‘தவிர்க்க முடியாத மூளை அழுத்தம்’ என்று கூறுகின்றனர். இந்த நிலை ஏற்படுத்தும் விளைவை எளிதாக புரிந்துக் கொள்வதற்காக, சுனாமியுடன் ஒப்பிட்டு, ‘பெருமூளை சுனாமி’ என்றும் அழைக்கின்றனர்.
மின்வேதியல் சமநிலை மாறுபடுவதால் மூளையில் உள்ள அணுக்கள் அழிக்கப்படும்போது, உடலில் இருந்து அதிக அளவிலான வெப்ப ஆற்றல் வெளியாகிறது. இதன்பிறகு மனித உடல் மரணிக்கிறது.
மரணமற்ற பெருவாழ்வு’
ஆனால், இந்த ஆய்வின்படி, இன்று மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்ற நிதர்சனமான உண்மை, எதிர்காலத்தில் மாறக்கூடும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அப்போது ‘மரணமற்ற பெருவாழ்வு’ வாழும் சூழ்நிலையும் உருவாகலாம்.
ஜென்ஸ் ட்ரேயர் இவ்வாறு கூறுகிறார்: “சோடியம் அயனிகளின் ஊடுருவலால், நரம்பு மண்டலத்தின் பிளாஸ்மா சவ்வின் உள்ளேயும் வெளியேயும் இடையே ஏற்படும் ஆற்றல் வேறுபாட்டால் ஏற்படும் இழப்பு, அணுக்களின் உருமாற்றத்தை தொடங்குகிறது. ஆனால் இது மரணம் அல்ல. ஏனெனில் மீண்டும் உடலில் மின்முனைவை அளித்து, அதை மீட்டெடுக்க முடியும். இதனால் மரணத்தில் இருந்து மனிதனை மீட்டெடுத்து, இறப்பை தவிர்க்க முடியும்.”
எனினும், இறப்பை தவிர்ப்பதற்கான நடைமுறைகளை கண்டறிய இன்னும் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான ஆராய்ச்சியும், மரணத்தை போன்றே சிக்கலானது என்று கூறுகிறார் ஜென்ஸ் ட்ரேயர். அதாவது, மரணம் தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் கிடைப்பதும் எளிதானதில்லை.
ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்ற பழமொழியை காலம் நிரூபித்து வருவதைப் போன்றே, மரணம் என்ற ஒன்றும் மனிதனுக்கு இல்லை என்ற புதுமொழியை உருவாக்க ஆராய்ச்சிகள் தொடரும். இந்த ஆராய்ச்சி மனிதனின் மரணத்தை மரணிக்கச் செய்யும் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது.