குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலைமை ஆபத்தானது! – ஸ்டீவன் ரெப்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது என்று யுத்தக்குற்றங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் விசேட தூதுவர் ஸ்டீவன் ரெப் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற 37வது மனித உரிமைகள் மாநாட்டின் உபகுழு கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

கடந்த காலங்களில் குற்றங்களைப் புரிந்த பலர் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை அதிகம் உள்ளது.

அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோர் பாரிய அளவில் மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுகின்ற போதும், அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படுவதில்லை.

இதன் விளைவுகளாலே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல வன்முறைகள் இடம்பெற்றன.

குற்றங்களைப் புரிந்துவிட்டு தப்பிக் கொள்வதற்கான வழிகள் இருக்கின்றன என்பதை வன்முறையாளர்கள் அறிந்திருக்கின்றனர்.

இந்தநிலைமையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தண்டனை வழங்கப்படாமை மிகப்பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.