பொதுவாக குடும்பங்கள் மற்றும், அலுவலகங்களில் குழப்பங்கள் நிலவுவதற்கு அடிப்படைக் காரணம், ஒருவரையொருவர் மன்னியாதிருத்தல்.
நம்முடைய சுயம், மன்னிப்பின் பெரிய எதிரி. ஆனால், மன்னிப்பு என்பது ஒரு கொடை. அதன் நேர்மறை தாக்கத்தை உணர்ந்தவர்கள், அதை கைப்பற்றி, புனிதராகின்றார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில் (எசா.55,10-11) சொல்லப்பட்டிருப்பதுபோல், வானின் பனித்துளியும், நீரும்போல, மன்னிப்பும், குறிக்கோள் கொண்டது. தன்னை அடைந்தவரை மாமனிதராக்கும் தன்மை கொண்டது. இறையும், மனிதமும் சந்திக்கும் நிலைதான் மன்னிப்பு.
உரக்க கத்தி கூச்சல்போட்டு ஒருவரை தாழ்த்துவதை விட, தாழ்ந்த குரலில், அவரை மன்னித்துப்பாருங்கள், நீங்கள் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுவீர்கள்.
இறைச்சாயலில் படைக்கப்பட்ட நமக்கு, நம் இறைத்தன்மையை வளர்த்தெடுக்கும் வாய்ப்பு, இந்த மன்னிப்பு. நமது செபத்தில் மன்னிக்கும் மனம் வேண்டுவோம்.
மன்னித்துவிடு என்பது மனிதம். மன்னித்துவிடுகிறேன் என்பது புனிதம்.