வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவைப் பொறுத்து வாய் துர்நாற்றம் உண்டாகலாம் அல்லது மருந்து பயன்பாடு, ஈறு பிரச்சனை, புகை பிடித்தல், வறண்ட வாய் அல்லது உதடு போன்றவை கூட வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
மேலும் பற்களின் இடையில் அல்லது நாவின் பின்புறம் உருவாகும் கிருமிகளே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணிகளாகும்.
இந்த வாய் துர்நாற்றத்தை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ,
வெந்தயம்
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து, சிறிது நேரம் கழித்து அதை வடிகட்டி குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் உடனடியாக கட்டுப்படும். இம்முறையை ஒரு நாளைக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
கிராம்பு
தினசரி உணவிற்கு பிறகு 2 துண்டு கிராம்பு உட்கொள்வதால் வாயில் வீசும் துர்நாற்றம் முற்றிலும் ஒழியும். அல்லது கிராம்பு போட்டு தயார் செய்யப்பட்ட டீயை குடிக்கலாம். அதனால் பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் வலியும் போய்விடும்.
எலுமிச்சை சாறு
ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து, அந்த நீரால் வாயை கொப்பளித்து வரலாம். இதனால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். தினமும் இரவு தூங்கும் முன்னும் காலையில் பல் துலக்கிய பின்னும் இதை செய்ய வேண்டும்.
பட்டை
ஒரு கிண்ணத்தில் நீரை விட்டு நன்றாக கொதித்ததும் அதில் சிறிதளவு லவங்க பட்டை தூளை சேர்த்து, அதனுடன் சிறிது பிரிஞ்சி இலை மற்றும் ஏலக்காயைச் சேர்த்து நன்றாக கொதித்தவுடன் அந்த நீரை வடிகட்டி அடிக்கடி வாயை கொப்பளிக்க வேண்டும்.
கொத்தமல்லி
கொத்தமல்லி இலையில் இருக்கும் க்ளோரோபில்கள் மிகச் சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு வாய் துர்நாற்றத்தை அகற்றுகிறது. அதற்கு கொத்தமல்லி இலைகளை சிறிதளவு வாயில் போட்டு மென்று வந்தாலே போதும்.
உப்பு நீர்
வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் வாயை அந்த உப்பு நீரினால் நன்கு கொப்பளிக்க வேண்டும்.