மாத்தளை மாவட்டத்தில், கலேவல பெலியகந்த பிரதேசத்தில் பெற்றோரின் பாதுகாப்பின்றி தோட்டமொன்றில் உள்ள குடிசை வீட்டுக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு குழந்தைகளை கலேவலை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
ஒன்றரை மற்றும் நான்கு வயதான பிள்ளைளே இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர்.
கலேவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக்க விதானாராச்சிக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளன.
5 நாட்களாக இந்த பிள்ளைகள் பெற்றோர் இன்றி தனியே வீட்டில் இருந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் வந்து உணவை கொடுத்துள்ளனர்.
இதன் பின்னர் பிரதேசவாசிகள் பிள்ளைகள் தனியே வீட்டில் இருப்பது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
பிள்ளைகளை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார் அவர்களுக்கு ஆடைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் உணவை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட பிள்ளைகள் குறித்து பொலிஸார் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உள்ளனர்.