தமிழகத்தில் பூட்டப்பட்ட அறையில் பத்து வயது சிறுவன் யாராவது என்னை காப்பாற்றுங்க என்று கதறிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன், கூலித் தொழிலாளியான இவருக்கு வேல்முருகன்(10) என்ற மகன் உள்ளார்.
அங்கிருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் சிறுவன் நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுள்ளான்.
பள்ளிக்கு சென்ற சிறுவன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் பள்ளிக்கு வந்துள்ளனர். பள்ளிக்கு வந்து பார்த்த போது, பள்ளி பூட்டியிருந்ததால் பெற்றோர் வேறு இடங்களுக்கு சென்று தேடியுள்ளனர்.
அந்த நேரத்தில் பள்ளிக்குள் இருந்து அண்ணா, அக்கா யாராவது என்னைக் காப்பாற்றுங்க, நான் அம்மாகிட்ட போக வேண்டும், வீட்டுக்குப் போக வேண்டும் என்ற சிறுவனின் அழுகுரல் கேட்டுள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற பலர் இந்த குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அங்கு சிறுவன் பூட்டப்பட்ட வகுப்பறையின் இரும்பு கேட்டின் மீது ஏறி நின்று காப்பாற்றுங்க.. காப்பாற்றுங்க என்று கத்தியுள்ளதை கண்டுள்ளனர்.
உடனடியாக அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், காலையில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் காது வலிக்கிறது என்று ஆசிரியரிடம் கூறியுள்ளான்.
மதிய உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து சிறுவன் கூறியதால், ஆசிரியர் கடைசியில் இருக்கும் பெஞ்சில் போய் படு என்று கூறியுள்ளார்.
மாலை பள்ளி விட்டதும், சிறுவன் தொடர்ந்து தூங்கியுள்ளான். இதை கவனிக்காமல் பள்ளி ஊழியர்கள் வகுப்பறையை அடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
உடனடியாக பெற்றோர்கள் வகுப்பறையை கூட சரியாக கவனிக்காமல் பூட்டிவிட்டுச் சென்ற ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.