இலங்கையில் யுத்தத்தின்போது இதுதான் நடந்தது! ஜெனிவாவில் பெண் குரல்

யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதை நான் கண்டிருக்கின்றேன் என யுத்தத்தின்போது கிளிநொச்சி மருத்துவமனையில் அரச மருந்தாளராக பணியாற்றிய கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற உபகுழுக்கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி வைத்தியசாலையில், நான் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன.

மக்கள் கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதை நான் கண்டிருக்கின்றேன்.

நான் மல்லாவி வைத்தியசாலையில் 1996ஆம் ஆண்டு முதல் அரச மருந்தாளராக பணியாற்றினேன். நான் அங்கு சேவையில் இருக்கும்போது அதிகளவான காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற வந்தனர்.

அரசாங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருந்துகளை அனுப்புவதற்கு கடமைப்பட்டிருந்தது. ஆனால் எமக்குத் தேவையான முழுமையான மருந்துகளை அரசாங்கம் அனுப்பவில்லை.

குறைந்தளவான மருந்துகளே எமக்கு கிடைத்தன. பல குறைபாடுகள் காணப்பட்டன. மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மின்பிறப்பாக்கியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே வழங்கும். மருந்து குறைப்பாடு ஏற்பட்டபோதும் செஞ்சிலுவை சங்கம் உதவியது.

மல்லாவி வைத்தியசாலை அமைந்திருந்த பகுதியில் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றன. பல மருத்துவ அதிகாரிகள் கடமையை புறக்கணித்து சென்றனர்.

ஆனால் அவர்களை நாம் குறைகூற முடியாது. தமது உயிரை அவர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் 2004ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி வைத்தியசாலையில் பணியாற்றினேன்.

இக்காலப்பகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் யுத்தம் தீவிரமடைந்தது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். நாம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.