தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோமாளி போல் நடந்துகொண்டதாக அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் பால் ஹாரிஸ் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் போட்டியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்த தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா, ஆக்ரோஷமாகச் செயல்பட்டார். அப்போது ஸ்மித்தின் தோளிலும் ரபாடா உரசினார். இதுகுறித்து போட்டி நடுவர் அளித்த புகாரை விசாரித்த ஐசிசி, ரபாடாவுக்கு 2 டெஸ்ட் போட்டிகள் விளையாட தடை விதித்தது. போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியத் துணைக் கேப்டன் டேவிட் வார்னரை ஆட்டமிழக்கச் செய்தபோதும், ரபாடா ஆக்ரோஷமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்தப் போட்டியில் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய ரபாடா, தென்னாப்பிரிக்க அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது, தென்னாப்பிரிக்க அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பால் ஹாரிஸ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். தடை குறித்து கருத்துத் தெரிவித்த ரபாடா, `களத்தில் எனது அணுகுமுறைகளைச் சரிசெய்ய நான் விரும்புகிறேன். இதனால், ஒட்டுமொத்த அணியும் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள பால் ஹாரிஸ், “ரபாடா, தனது அணுகுமுறையை மாற்ற வேண்டுமென்றால், மற்ற அனைவரும்தான் மாற்ற வேண்டும். தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி, கோமாளியைப் போல் நடந்துகொண்டார். என்னைப் பொறுத்தவரை பொதுவாக, ரபாடா அல்லது தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் மீது சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலுக்குப் பிரச்னை இருப்பதாகவே தோன்றுகிறது’’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார். பால் ஹாரிஸின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
A regretful Kagiso Rabada addressed the media before he knew he had been banned and recognised he might need to relook at his on-field behaviour: https://t.co/qYlHjWC2eb #SAvAUS #cricket
— Firdose Moonda (@FirdoseM) March 12, 2018