மதுரை குலுங்க குலுங்கக் கூட்டத்தைக் கூட்டி, தனது கட்சியின் பெயரை… ஸாரி…. அமைப்பின் பெயரை அறிவித்திருக்கிறார் டி.டி.வி தினகரன்! அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் தனது முயற்சியில், பின்னடைவைச் சந்தித்த தினகரன், தனது அடுத்தகட்ட முயற்சியாக புதிய கட்சி ஆரம்பிக்கும் முடிவை எடுத்துச் செயல்படுத்தத் தொடங்கியிருந்தார். ஆனாலும், அவரது இந்த முயற்சிக்கு சசிகலாவிடமிருந்து முழு ஒப்புதல் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. அவரது ஆதரவாளர்களேகூட, ”அ.தி.மு.க-வுக்கு எதிராக புதிய கட்சியை ஆரம்பிப்பதென்பது, ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க-வுக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிரானவர்கள் என்ற நிலையை ஏற்படுத்திவிடும்” என்று அப்போது எச்சரித்தனர்.
மேலும், ”தினகரன் புதிய கட்சித் தொடங்கினால், அதில் நாங்கள் இணைய மாட்டோம்” என்றும் வெளிப்படையாகப் பேட்டியளித்தனர். ஆனாலும்கூட, நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழக’ அறிமுகக் கூட்டத்தில் இந்த அதிருப்தி ஆதரவாளர்களும் தினகரனோடு கைகோத்து நின்றிருப்பதுதான் அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்தத் தடாலடி மாற்றத்தின் பின்னணி குறித்துப் பேசும் தினகரன் ஆதரவாளர்கள், ”எங்களைப் பொருத்தவரையில், அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதுதான் எங்களது இமாலய இலக்கு. ஆனால், இன்றைய நிலையில், கட்சி, சின்னம் என்று எந்தவித அடையாளமும் இல்லாமல் நாங்கள் தனித்து நிற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்தச் சூழலானது, தேர்தல் நேரத்தில் எங்களுக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே, தற்காலிகமாக எங்களை நிலைநிறுத்திக்கொள்ள, எங்களது இலக்கை எட்டுவதற்கான அடிப்படையாகவே ‘அ.ம.மு.க’-வை ஆரம்பித்திருக்கிறோம்” என்று புதிய விளக்கம் சொல்கிறார்கள்.
இதற்கிடையில், டி.டி.வி தினகரனின் புதிய கட்சி அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்துப் பேசும் முக்கியப் புள்ளிகள், ”இன்றைய அரசியல் சூழ்நிலையில், தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன..? இதனால் கிடைக்கப்போகும் உடனடித் தீர்வுதான் என்ன..? சிரமப்பட்டு ஜெயித்து எம்.எல்.ஏ ஆன 18 பேர், தினகரனை நம்பி வந்ததினாலேயே இன்றைக்குப் பதவி பறிபோய், டம்மியாகி நிற்கிறார்கள். ஆனால், தினகரன் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். மூன்று நாள்களுக்கு முன்னதாக, புதிய கட்சி அறிவிப்பு குறித்தான அனுமதியைப் பெறுவதற்காக சசிகலாவைப் பார்க்கச் சென்றார் தினகரன். ஆரம்பத்திலிருந்தே இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த சசிகலா, ‘பந்தக்கால் நட்டுவிட்டு வந்து என்னிடம் பர்மிஷன் கேட்கிறாயா?’ என்று கடுமையான வார்த்தைகளில் கொந்தளித்திருக்கிறார்.
ஏற்கெனவே, தினகரன் ஆதரவாளர்களை ‘கட்சித் தாவல் தடைச் சட்ட’த்தின் கீழ் நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தினகரன் புதிய கட்சி தொடங்கினால், இது அப்பட்டமான கட்சித் தாவலாகத்தானே கருத முடியும்? திரைப்படங்களில், மச்சம் வைத்து ஆள் மாறாட்டம் காட்டுவதுபோல், ‘இது கட்சி இல்லை… அமைப்பு’ என்று சொன்னால் போதுமா? சரி…. அமைப்புக்குத்தான் பெயர் வைத்தார்களே…. அதனை, ‘அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு’ என்று வைத்திருந்தால், ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘அம்மா’ (AMMA) என்று குறிப்பிட்டிருக்க முடியும். ஆக, அமைப்பின் பெயரைக்கூட அவசர கதியில் சூட்டியிருப்பவர்கள் மற்ற அரசியல் வியூகங்களை எப்படி யூகித்திருப்பார்கள்?
புதிய கட்சி அறிவிப்புக்கு வந்திருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் மீதும் ‘கட்சித் தாவல் சட்டப்படி’ நடவடிக்கை எடுத்தது சரி என்றுதானே இனி நீதிமன்ற வழக்கின் போக்கு மாறும். இது அவர்களது எதிர் அணியினருக்குத்தானே சாதகமாகும்…?
‘அடுத்து வரும் தேர்தலை எதிர்கொள்ளவே இந்தப் புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது’ என்று தினகரன் தரப்பினர் இப்போது விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இன்னும் அரசியல் பாலபாடத்தையே படிக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. ஏனெனில், தமிழகத்தில் அடுத்து தேர்தல் வருமா, வராதா, தமிழகத்தில் தேர்தலை எப்படிச் சந்திக்கலாம்… என்பது போன்ற வியூகங்களை எல்லாம் யார், எங்கிருந்து முடிவு செய்கிறார்கள் என்பதெல்லாம் இவர்களுக்கு இன்னுமா தெரியவில்லை?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
புதிய அமைப்பு அறிமுகக் கூட்டம் முடிந்து பந்தல் பிரிக்கும்முன்னே, முணுமுணுக்கும் இந்த அதிருப்திக் குரல்கள் குறித்துப் பேசும் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழக’த்தின் முக்கியஸ்தர்கள், ”எங்கள் அமைப்பில் யாரும் அதிருப்திக் குரல் எழுப்பவில்லை… சசிகலாவோடு கலந்து பேசித்தான், தினகரன் இந்த முடிவை அறிவித்திருக்கிறார். அதனால்தான் ‘இது ஒரு தற்காலிக முடிவு’ என்று மேடையிலேயே அவர் அறிவித்தார். என்றைக்கு இருந்தாலும் அ.தி.மு.க எங்கள் வசமாகும்; இரட்டை இலைதான் எங்கள் சின்னம். அதற்கான எல்லா முயற்சிகளையும் தினகரனின் ஆலோசனையோடு நாங்கள் செயல்படுத்துவோம்.
ஒட்டுமொத்த அ.தி.மு.க-வும் தினகரன் பின்னால்தான் அணிவகுத்து நிற்கிறது என்பதைத்தான் மேலூர் கூட்டமும் நிரூபித்திருக்கிறது. இதைப் பொறுக்கமுடியாமல், எதிர் முகாமில் உள்ளவர்கள் ஏதேதோ பொறுமிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அசால்ட் காட்டுகிறார்கள்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து டெல்லியையே அதிரவைத்தவர் டி.டி.வி தினகரன். அடுத்த குறியாக, ‘அ.ம.மு.க’ அமைப்பை ஆரம்பித்திருக்கிறார்…. ‘இந்த அரசியல் கணக்கும் அதிரடி வெற்றியை அள்ளித்தருமா…’ என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!