`நீங்க அழகா இருக்கீங்க!” – விஜயபாஸ்கரின் ‘பொறுப்பான’ பதில்

பெண் செய்தியாளர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், அவரை சீண்டும் விதமாகப் பதில் அளித்துள்ளார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

விஜயபாஸ்கர்

நேற்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், எம்.எல்.ஏ-க்கள் பொதுக்குழுக் கூட்டம்நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டம் முடிந்து வெளியே வந்துள்ளார். அப்போது, டி.டி.வி.தினகரன் தொடங்கும் புதிய கட்சி குறித்த ஆலோசனை விவாதம் நடைபெற்றிருக்கும் என எதிர்பார்த்த நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க அவரிடம், பெண் செய்தியாளர் ஒருவர் கேள்விகளை அடுக்கினார்.

அவர், கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், ‘ஸ்பெக்ஸ் ரொம்ப அழகா இருக்கு. அதற்கு நான் எப்போதும் ஸ்பெக்ஸ் போட்டிருப்பதாக செய்தியாளர் கூறவே,  இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க’ என்று பொறுப்பாகப் பதில் அளித்தார். பின்னர் சுதாரித்தவர், ‘எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளை, கட்சி மேலிடம் அறிக்கையாக வெளியிடும்’ என்று சொல்லிச் சென்றார்.  சிறிது தூரம் சென்ற பிறகும் செய்தியாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பவே, அதற்கு ‘அழகா இருக்கீங்க….அழகா இருக்கீங்க….அழகா இருக்கீங்க’ என 3 முறை கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பெண் செய்தியாளரிடம் பேசும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், `அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது கண்டிக்கத்தக்கது, ஓர் அமைச்சரே பெண் செய்தியாளரிடம் இப்படி நடந்தால், அதை முன்னுதாரணமாக எடுத்து கட்சிக்காரர்களோ மற்றவர்களோ நடக்க வாய்ப்பாக அமையும். அமைச்சர் விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுமுன் செய்தியாளர்கள் கூடுகின்றனர்.